

புதுச்சேரியில் குழந்தைப் பிறப்பு அதிகமானதற்கு காரணம் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 60 சதவீதம் பேர் புதுச்சேரியில் குழந்தை பெற்று கொள்வதுதான் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
உலகில் பெருகி வரும் மக்கள் தொகையை நிலைப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூலை 11-ம் தேதி உலக மக்கள் தொகை தினம் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான மக்கள் தொகை தின நிகழ்ச்சி புதுச்சேரி அரசு நலவழித்துறை சார்பில் நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இடையே விழிப்புணர்வு பேரணி போட்டி நடைபெற்றது. இதில் முதல் மூன்று இடங்களுக்கு தேர்வுபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி கடற்கரை சாலை காந்தி திடலில் நடைபெற்றது.
இதில், முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி பேசியதாவது: அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் சீனாவிற்கு அடுத்து இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. அதிக மக்கள் தொகையால் பயன்களும் உண்டு, பாதிப்புகளும் உண்டு. இந்தியாவில் உள்ள 127 கோடி மக்களுக்கு கல்வி, வீடு, வேலைவாய்ப்பு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்க அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
புதுச்சேரியில் குடும்ப கட்டுப்பாட்டுக்கு அதிக கவனம் செலுத்தப்படுகிறது. ஆனாலும் குழந்தை பிறப்பு அதிகம் உள்ளது. அதற்கு தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 60 சதவீதம் பேர் புதுச்சேரியில் குழந்தை பெற்று கொள்வதுதான் காரணம். மக்கள் தொகை கட்டுப்பாடு குறித்து கிராமப் புறங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நகரத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்வதில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 7.5 லட்சமாக இருந்த மக்கள் தொகை தற்போது 13 லட்சமாக உயர்ந்துள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை கொண்டு வந்துள்ளோம். இதை 3 ஆண்டுகளில் நிறைவேற்றுவோம். பட்ஜெட்டில் கல்விக்கு 8 சதவீதமும், சுகாதாரத்திற்கு 6 சதவீதமும் நிதி ஒதுக்கி வருகின்றோம். புதுச்சேரியில் வளர்ச்சி தொடர மக்கள் தொகை கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., செயலர் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.