

தனியார் மருத்துவமனை செவிலியர்களுக்கு அரசு செவிலியருக்கு இணையான ஊதியம் வழங்கப்படுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''உயிர் காக்கும் மருத்துவத் துறையில் பணியாற்றும் பெரும்பாலான பணியாளர்களுக்கு அவர்களின் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கு தேவையான ஊதியம் கூட வழங்கப்படுவதில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது. உச்ச நீதிமன்ற ஆணைப்படி அமைக்கப்பட்ட ஊதியக் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த மத்திய அரசு ஆணையிட்டும் அதை மாநில அரசுகள் மதிக்காதது கண்டிக்கத்தக்கது.
மருத்துவ சேவைத் துறையில் செவிலியர்களின் பணி மகத்தானது ஆகும். நோயாளிகளை கனிவுடன் கவனித்துக் கொள்வதில் தொடங்கி, அவர்களின் சொந்த சோகங்களை மறைத்து புன்னகையுடன் பணி செய்வது வரை அவர்களின் தியாகங்கள் அளவிட முடியாதவை. ஆனால், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் என்பது மிகமிகக் குறைவு ஆகும்.
மாவட்டத் தலைநகரங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் ரூ.5000 முதல் ரூ.7000 வரை மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. சென்னையில் சாதாரண மருத்துவமனைகளில் ரூ.6000 முதல் ரூ.10,000 வரை மட்டுமே தொடக்க நிலை ஊதியமாக வழங்கப்படுகிறது. அதேநேரத்தில் செவிலியர்கள் வரையறுக்கப்பட்ட பணி நேரம் இல்லாமல் அதிக நேரம் பணி செய்ய கட்டாயப்படுத்தப்படுகின்றனர். மொத்தத்தில் அவர்களின் நிலை பரிதாபமானது.
தனியார் மருத்துவமனை செவிலியர்களின் பரிதாப நிலை குறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவர்களின் வாழ்க்கை நிலை குறித்து ஆய்வு செய்யவும், அவர்களுக்கான ஊதிய விகிதங்கள் குறித்து அரசுக்கு பரிந்துரைக்கவும் வல்லுநர் குழு அமைக்கும்படி மத்திய அரசுக்கு ஆணையிட்டது. அதன்படி ஆய்வு செய்த குழு அளித்த பரிந்துரைகளின்படி தனியார் மருத்துவமனை செவிலியர்களுக்கு புதிய ஊதிய விகிதத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவித்தது. அதை உடனடியாக செயல்படுத்தும்படி மாநில தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் எழுதிய மத்திய அரசு, இதுதொடர்பாக சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றும்படியும் அறிவுறுத்தியிருந்தது. ஆனால், தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் எந்த மாநிலத்திலும் செவிலியருக்கு புதிய ஊதிய விகிதம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
அண்மையில் கேரளத்தில் தனியார் மருத்துவமனை செவிலியர்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து அங்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.20,000 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விரிவான ஊதிய விகிதம் விரைவில் நிர்ணயிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தனியார் மருத்துவமனை செவிலியர்களின் நிலை மிகமிக பரிதாபமாக இருக்கும் நிலையில், அவர்களுக்கு கூடுதல் ஊதியத்தை பெற்றுத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இது தனியார் மருத்துவமனைகளின் ஊதிய விகிதம் குறித்த பரிந்துரையை செயல்படுத்தும் நடவடிக்கை தான் என்பதால் அரசுக்கு எந்த செலவும் ஏற்படப்போவதில்லை. ஆனாலும், இதை செய்ய தமிழக அரசு தயங்குவது ஏற்கத்தக்கதல்ல.
மத்திய அரசு வழங்கியுள்ள அறிவுரைப்படி 50 படுக்கைகளுக்கு குறைவாக உள்ள மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.20,000 வழங்கப்பட வேண்டும். 50 முதல் 100 படுக்கை வரை உள்ள மருத்துவமனைகளின் செவிலியர்களுக்கு அரசு செவிலியருக்கு வழங்கப்படும் ஊதியத்தில் 25% குறைவாகவும், 100 படுக்கைகளுக்கு மேல் உள்ள மருத்துவமனை செவிலியர்களுக்கு 10% குறைவாகவும், 200 படுக்கைகளுக்கு மேல் உள்ள மருத்துவமனைகளின் செவிலியர்களுக்கு அரசு ஊதியத்துக்கு இணையான ஊதியமும் வழங்கப்பட வேண்டும்.
இதற்கான சட்டத்தை உடனடியாக நிறைவேற்றி தனியார் மருத்துவமனை செவிலியர்களுக்கு அரசு செவிலியருக்கு இணையான ஊதியம் வழங்கப்படுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்துகிறேன்'' என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.