

சட்டப்பேரவை கூட்டத் தொடர் முடிவதற்குள் அதிமுகவின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை சந்திப்பார்கள் என அதிமுக (அம்மா) கட்சியின் செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
அதிமுக (அம்மா) கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் நேற்று சென்னையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார். சுமார் ஒருமணி நேரம் இச்சந்திப்பு நடைபெற்றது.
பின்னர் வெளியே வந்த நாஞ்சில் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:
அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் சாரை சாரையாக வந்து சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். விரைவில் அவர் தனிப் பெரும் தலைவராக உருவெடுப்பார். அவருடன் சேர்ந்து நானும் பணியாற்றும் காலம் எனக்கும் கிடைக்கும். அதிமுகவில் தற்போது நிலவும் தட்பவெப்ப சூழல் நிரந்தரமானது அல்ல. விரைவில் அது மாறும்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் தென்னரசு, டிடிவி தினகரனை நேற்று இரவு (நேற்றுமுன்தினம்) சந்தித்துப் பேசினார். தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சட்டப்பேரவை கூட்டத் தொடர் முடிவதற்குள் அதிமுகவின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை வந்து சந்திப்பார்கள்.
இவ்வாறு நாஞ்சில் சம்பத் கூறினார்.