

கோவையை அடுத்துள்ள வெள்ளிமலைப்பட்டணம் ஊராட்சியில் வறட்சி காரணமாக சிறுவாணி குடிநீர் விநியோகத்தில் பல புதுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கோவை மாவட்டத்தில் வரலாறு காணாத அளவுக்கு வறட்சி நிலவுவதால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி வறண்டு விட்டதால் கோவையில் மேற்குப் பகுதி கிராமங்களும், மாநகராட்சியின் ஒரு சில பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, கேரள அரசின் அனுமதியோடு சிறுவாணி அணையின் வேறொரு பகுதியிலிருந்து கோவைக்கு நீர் பெறப்படுகிறது. மேலும் பில்லூர், ஆழியாறு குடிநீர் திட்ட நீரைப் பயன்படுத்தி ஓரளவுக்கு தட்டுப்பாடு சமாளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, சிறுவாணி நீரைப் பெற்று வரும் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார கிராமங்களில் கூடுதலாக சிக்கன நடவடிக்கைகளை ஊராட்சி நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன. சிறுவாணி மலைத்தொடர் அடிவாரத்தில் உள்ள வைதேகி நீர்வீழ்ச்சியை ஒட்டியுள்ள வெள்ளிமலைப்பட்டணம் ஊராட்சியில் குடிநீர் விநியோகத்தில் புதுமையான கட்டுப்பாடுகளை ஊராட்சி நிர்வாகம் விதித்துள்ளது.
அதாவது, குடிநீருக்காக விநியோகிக்கப்படும் சிறுவாணி நீரில் குடங்களைக் கழுவக்கூடாது, ஒரு குடும்பத்துக்கு 2 குடங்கள் (ஒரு குடத்துக்கு சுமார் 18 லிட்டர் நீர்) மட்டும், வரிசையில் வைத்து பிடிக்க வேண்டும். அல்லது ஒரு கேன் (சுமார் 40 லிட்டர்) மட்டும் வைத்து வரிசையில் நின்று பிடிக்க வேண்டும் என ஊராட்சி தனி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கான அறிவிப்புப் பலகைகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஊராட்சி செயல் அலுவலர் எம்.மாரப்பன் கூறும்போது, ‘இந்த ஊராட்சியில் வெள்ளிமலைப்பட்டணம், விராலியூர் கிராமங்கள் உள்ளன. சுமார் 1000 குடும்பங்கள் உள்ளன. அதில், விராலியூரில் குடிநீருக்கான வீட்டு இணைப்புகள் ஏதும் இல்லை. வெள்ளிமலைப்பட்டணத்தில் மட்டும்தான் 3 இணைப்புகள் உள்ளன. மற்றபடி இரு கிராமங்களிலும் சேர்த்து 13 பொது குடிநீர் குழாய்கள் தான் உள்ளன. அதில் வரும் நீரைத்தான் மக்கள் குடிக்க பயன்படுத்துகிறார்கள். கடந்த சில மாதங்களாக மிகுந்த சிரமத்துக்கு இடையே சிறுவாணி நீர் பெறப்பட்டு விநியோகிக்கப் படுகிறது.
மேலும் நிலைமை மோசமடைந்து வருவதால், குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த இந்த புதிய உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. பொதுக்குழாய்கள் என்பதால், வெளியிலிருந்து வரும் நபர்கள் வாகனங்கள் பெரிய, பெரிய கேன்களை கொண்டு வந்து அதிகளவு நீரை பிடித்துச் சென்றுவிடுகிறார்கள். இதனால் இங்குள்ள ஜல்லிப்பாளையம், மாணிக்கவாசகர் நகர், ஆதிதிராவிடர் காலனி மக்களுக்கு குடிநீர் கிடைப்பதில்லை. இதை முறைப்படுத்துவதற்காகவே புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதேநேரம் நிலைமை மோசமடையாதவாறு நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இதற்கு மக்களும் ஒத்துழைக்கிறார்கள்’ என்றார்.