

தேன்கனிக்கோட்டை அருகே முனிவர் வடிவ நடுகற்களை வரலாற்று ஆய்வு மைய குழுவினர் கண்டறிந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட அறம் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த அறம் கிருஷ்ணன் தலைமையில் பிரியன், மஞ்சுநாத், சீனிவாசன் ஆகியோர், தேன் கனிக்கோட்டை மாசிநாயன் பள்ளியில் இருந்து கெலமங்கலம் செல்லும் சாலையில், விவசாய நிலத்தில் நடுகற்கள் இருப்பதைக் கண்டறிந்தனர். புதுமையாக உள்ள இந்த நடுகற்கள் தொடர்பாக அறம் கிருஷ்ணன் கூறியதாவது:
புடைப்பு சிறப்பமாக இருக்கும் பெரும்பாலான நடுகற்களில் உடல் உறுப்புகள் அனைத்தும் சிறப்பாக செதுக்கப்பட்டிருக்கும். இந்த நடுகல் புதிய வடிவத்தில் சமமாக செதுக்கப்பட்டுள்ளது. இதில் போர் வீரன், சிறு, குறு நில அரசன் என்பதற்கான அடையாளங்களும் இல்லை. தவம் செய்யும் முனிவராக இருக்க வாய்ப்பு இருக்கிறது. முனிவர் என கருதப்படுவதற்கு ஆடைகள், அணிகலன்கள் ஏதுமில்லை. தியானம் செய்வது போல் அமைந்துள்ளது. சிற்பத்தின் வலது பக்கத்தில் ஒரு பெண் சிற்பமும், பின்புறம் மிகச்சிறிய அளவில் 2 குழந்தைகள் கைகள் இணைந்தபடி நிற்கின்றனர்.
நடுவில் இருக்கும் சிற்பத்தின் கீழ்பகுதியில் 2 குதிரைகளும், 2 பெண் சிற்பங்கள் தோளின் மீது எதையோ தாங்கி பிடித்திருப்பது போல் செதுக்கப்பட்டுள்ளன. சிற்பத்தின் நுணுக்கத்தை கணக்கிட்டால், 14-ம் நூற்றாண்டு, அதற்கு பிற்பட்ட காலமாகத்தான் இருக்க கூடும்,’’ என்றார்.