

பட்டியல் மற்றும் பழங்குடியின மாணவிகளில் பெரும் பகுதியினர் குடும்பச் சூழல் காரணமாக 8-ம் வகுப்புக்கு மேல் படிப்பைத் தொடர் வது இல்லை. இந்நிலையை மாற்றி பெண் கல்வியை ஊக்கப்படுத்த 2008-09 கல்வியாண்டில் தேசியப் பெண் கல்வி ஊக்குவிப்புத் திட்டத்தை (என்.எஸ்./ஜி.எஸ்.இ) மத்திய அரசு அமல்படுத் தியது.
இதன்படி, ஆண்டுதோறும் 9-ம் வகுப்பு படிக்கும் பட்டியல் மற்றும் பழங்குடியின மாணவிகளுக்கு தலா ரூ.3 ஆயிரம் ஊக்கத்தொகை மாணவிகளின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். திட்டத் தில் சேரும் மாணவிகள் 10-ம் வகுப்பை கட்டாயம் முடிக்க வேண் டும். 18 வயது பூர்த்தியாகும்போது 10-ம் வகுப்பு முடித்ததற்கான சான்றிதழை வங்கியில் சமர்ப்பித்து, தங்களது பெயரில் வைப்பில் உள்ள 3 ஆயிரம் ரூபாயையும் அதற்கான வட்டியையும் பெற்றுக் கொள்ளலாம்.
இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 2008-09 கல்வியாண்டில் 74,232 மாணவிகள் பயனாளிகளாகத் தேர்வு செய்யப்பட்டனர். 9 ஆண்டு கள் கடந்த பிறகும் இதுவரை ஒரு மாணவிக்குக் கூட அந்த உதவித் தொகை வந்து சேரவில்லை என்று தமிழ்நாடு தலித் விடுதலை இயக் கத்தின் மாநில இணைச் செயலா ளர் ச.கருப்பையா குற்றம் சாட்டு கிறார்.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் அவர் கூறியதாவது: இத்திட்டத் தின் செயல்பாடு குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுக்கே போதிய புரிதல் இல்லை. 2008-09ல் மட்டும் 22 கோடியே 28 லட் சத்து 16 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதுவே இன்னும் வழங் கப்படாத நிலையில், அடுத்தடுத்த ஆண்டுகளில் இத்திட்டத்துக்காக எத்தனை மாணவிகள் தேர்வு செய் யப்பட்டார்கள் என்ற விவரத்தை கூட அதிகாரிகள் தர மறுக்கிறார்கள்.
இந்த விவகாரத்தில் உரிய நட வடிக்கை எடுக்கக் கோரி தேசிய பட்டியல் மற்றும் பழங்குடியினர் ஆணையத்துக்கு பிப்ரவரி 1-ல் புகார் அனுப்பினேன். ஆணைய மும் உரிய விளக்கம் கேட்டு பள்ளிக்கல்வித் துறை இயக்கு நருக்கு பிப்ரவரி 10-ல் கடிதம் அனுப்பியது.
இது தொடர்பாக, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் எனக்கு அளித்த பதிலில், “பெண் கல்வி ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் தகுதி பெற்ற பட்டியல் மற்றும் பழங்குடியின மாணவிகளின் பெயர் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பப்படுகிறது. மத்திய அரசே சம்பந்தப்பட்ட மாணவிகளின் வங் கிக் கணக்கில் நேரடியாக பெண் கல்வி ஊக்குவிப்புத் தொகையை வழங்குகிறது’’ என தெரிவித் துள்ளார்.
இத்திட்டத்தால் பயனடைய வேண்டிய மாணவிகளுக்கு ஒரு பைசாகூட போய் சேரவில்லை என்பதை நேரடி விசாரணையின் மூலம் நான் உறுதிப்படுத்திக் கொண்டேன். கடந்த 9 ஆண்டு களில் இத்திட்டத்துக்காக ஒதுக்கப் பட்ட நிதி என்ன ஆனது? வேறு ஏதாவது செலவுகளுக்கு திருப்பி விடப்பட்டதா? அல்லது வேறு ஏதாவது முறைகேடு செய்திருக்கி றார்களா என்ற விவரம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
இதுகுறித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப் பனிடம் கேட்டபோது, “பயனாளி மாணவிகள் பட்டியலை எடுத்து அனுப்புவதோடு எங்களது வேலை முடிந்துவிடும். கூடுதல் விவரம் தேவை என்றால் இணை இயக்கு நர் பொன்னையாவிடம் கேளுங் கள்’’ என்றார்.
இது தொடர்பாக இணை இயக்கு நர் பொன்னையாவிடம் தொலை பேசியில் கேட்டபோது, “நீங்கள் என்ன எழுதினாலும் அதனால் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை’’ என்று சொல்லி இணைப் பைத் துண்டித்துக்கொண்டார்.
அதிகாரிகளிடம் உரிய பதிலை கேட்டு பிரசுரிப்பதற்காக 15 நாட்களுக்கும் மேலாக முயற்சி செய்தோம். அப்படியும் அவர்கள் நமக்கு இந்தத் திட்டம் குறித்து எந்தத் தகவலையும் சொல்லத் தயங்குவது பல்வேறு சந்தேகங் களை எழுப்புகின்றன.
2 தவணைகளில் ஊக்கத்தொகை
இத்திட்டத்தை நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபோது, ‘திட்டத்துக்கான பயனாளிகள் பட்டியல் மாநில, யூனியன் பிரதேச அரசுகளிடம் இருந்து பெறப்படும். அந்தப் பட்டியலின் அடிப்படையில் ஒரு வருடத்துக்கு அனுப்ப வேண்டிய ஊக்கத்தொகையானது 2 தவணைகளாக மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
முதல் தவணையை சம்பந்தப்பட்ட மாணவிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தி அது தொடர்பான அறிக்கையை மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு மாநில, யூனியன் பிரதேச அரசுகள் அனுப்பி வைக்க வேண்டும். அதை சரிபார்த்த பிறகு இரண்டாவது தவணையை மத்திய அரசு வழங்கும்’ என்று மத்திய நிதியமைச்சர் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார். இதற்கான ஆதாரம் நம்மிடம் உள்ளது.