

ஓசூரில் விளைவிக்கப்படும் உயர் ரக ரோஜா மலர்களுக்கு காப்புரிமை கட்டணம் செலுத்துமாறு விவசாயி களுக்கு நெதர்லாந்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால், காதலர் தினத்தையொட்டி ஓசூர் ரோஜாக் கள் ஏற்றுமதி பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் நிலவும் சீதோஷ்ண நிலை மற்றும் மண் வளத்தால், சுமார் 7 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் ரோஜா மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆயிரத்துக்கும் மேற் பட்ட விவசாயிகள் பசுமைக்குடில் அமைத்தும், திறந்தவெளியிலும் உலகத்தரம் வாய்ந்த ரோஜா மலர்களை சாகுபடி செய்து வரு கின்றனர்.
இங்கு உள்ள தனியார் மலர் உற்பத்தி மையங்கள் மற்றும் அமுதகொண்டப்பள்ளியில் உள்ள அரசு, தனியார் கூட்டு நிறுவனமான 'டான்ப்ளோரா' மூலம் சுமார் 80 மில்லியன் ரோஜாக்கள் ஹாலந்து, டென்மார்க், சிங்கப்பூர், துபாய், ஆஸ்திரேலியா, ஜப்பான், நியூசி லாந்து உள்ளிட்ட பல வெளி நாடுகளுக்கு ஆண்டு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
வறட்சி, பண மதிப்பு நீக்கம்
நிகழாண்டில் மாவட்டத்தில் போதிய மழையின்மை, பண மதிப்பு நீக்க நடவடிக்கை உள்ளிட்டவற் றால் ரோஜா சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கடும் பாதிப் படைந்துள்ளனர். இந்நிலையில், நெதர்லாந்தை சேர்ந்த மோரியம் என்ற நிறுவனம் ஓசூரில் விளைவிக்கப்படும் உயர் ரக ரோஜாக் களுக்கு காப்புரிமை கேட்டு விவசாயிகளுக்கும், மலர் ஏற்றுமதி நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இதுகுறித்து ஓசூரைச் சேர்ந்த மலர் விவசாயி பாலசிவபிரசாத் கூறும்போது, ‘‘நெதர்லாந்து நாட்டு ரோஜா மலர்களான தாஜ்மஹால், அவலாஞ்ச், ஹாட் உள்ளிட்ட 36 ரகங்களை, ஓசூர் சுற்றுவட்டாரத்தில் சிறு மற்றும் குறு விவசாயிகள் தரமாக சாகுபடி செய்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்று மதி செய்து வருகின்றனர்.
வெளிநாடுகளில் ஓசூர் ரோஜாவுக்கு அதிக வரவேற்பு கிடைக் கிறது. இதுவரை காப்புரிமை கட்டணம் எதையும் ஓசூர் ரோஜா விவசாயிக ளிடம் பெறாத நெதர்லாந்து நிறுவனம், வருகிற ஜனவரி 20-ம் தேதி முதல் உள்நாட்டு விற்பனை மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ரோஜா மலர்களுக்கு கட்டாயம் காப்புரிமை கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவித்து அனைத்து சிறு, குறு, பெரிய விவசாயிகளுக்கும், மலர் ஏற்றுமதி நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதுதொடர்பாக பெங்களூருவில் உள்ள மலர் வர்த்தக மையத்தில் கலந்தாய்வு கூட்டத்தை அந்நிறுவனம் நடத்தி யது. ஒரு செடிக்கு ஒரே கட்டணமாக ரூ.85 செலுத்த வேண்டும் அல்லது ஆண்டுக்கு ஒரு முறை ரூ.11 செலுத்தவும், ஏற்றுமதி செய்யப்படும் ஒரு ரோஜாவுக்கு ரூ.1.20 கட்ட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
உள்ளூர் சந்தையிலும் பாதிப்பு
வழக்கமாக காதலர் தினத்துக்கு ஓசூரில் இருந்து 1 கோடி மலர்கள் ஏற்றுமதி செய்யப்படுவது வழக் கம். இந்த ஆண்டு, புதிய பிரச் சினை உருவாகியுள்ளதால் காதலர் தினத்துக்கு ஓசூர் ரோஜாக்கள் ஏற்றுமதி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இயற்கை இடர்பாடு களால் நொடிந்துள்ள சிறு, குறு விவசாயிகள் விழாக்காலங்களில் விற்பனையாகும் மலர்களைக் கொண்டு, அதனை ஈடுகட்டி வருகின்றனர். காப்புரிமை கட்டணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட் டுள்ளது வேதனையளிக்கிறது.
சிறு, குறு விவசாயிகள், சிறிய அளவிலான ஏற்றுமதியாளர்களிடம் ரோஜா மலர்களுக்கு காப்புரிமை கட்டணம் வசூல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் உள் ளூர் சந்தையில்கூட ரோஜாக் களை விற்பனை செய்ய முடியாமல் போகும்.
புதிய ரக மலர்கள்
இந்தியாவில் புதிய வகையான ரோஜா மலர்கள் கண்டுபிடிக்கத் தேவையான அனைத்து வசதிக ளும் உள்ளன. இதற்காக உருவாக்கப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட ஆய்வுக்கூடங் கள், ஆராய்ச்சி மையங்கள் செயல்படாமல் உள்ளன. ஆராய்ச்சிகள் மூலம் புதிய உயர்ரக மலர் களை உற்பத்தி செய்தால் விவசாயிகளுக்கும், அரசுக்கும் வருவாய் கிடைக்கும் என்றார்.
இவ்விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டினால், மலர் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விகுறியாகும் என்பதில் ஐயமில்லை என்கின்றனர் விவசாயிகள்.