மின்சாரம் தாக்கி இறந்த 4 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கிடுக: வைகோ கோரிக்கை

மின்சாரம் தாக்கி இறந்த 4 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கிடுக: வைகோ கோரிக்கை
Updated on
1 min read

மின்சாரம் தாக்கி இறந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் தமிழக அரசு வழங்க வேண்டுமென மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''திருநெல்வேலி மாவட்டத்தில் மீனவ மக்கள் வாழ்கின்ற உவரி, கத்தோலிக்க கிறித்தவப் பெருமக்கள் நிறைந்த ஊராகும். மாதா பிறந்தநாள் திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான கிறித்தவ மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடினர். மாதாவுக்குச் சிறப்புச் செய்யும் வகையில் தேர் திருவிழா நடைபெற்றது. அப்பொழுது ராஜா, நிமோ, கிளைவ், ராஜ் ஆகிய நான்கு மீனவர்களை மின்சாரம் தாக்கியது. திசையன்விளை கிறிஸ்டோபர் மருத்துவமனைக்குக் சொண்டு செல்லும் வழியிலேயே அவர்கள் உயிரிழந்தனர். மேலும் பதினைந்து பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

உயிரிழந்த நான்கு மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடும், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு மருத்துவச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதோடு, அக்குடும்பங்களுக்கும் நிவாரணத் தொகை வழங்க வேண்டுமென தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று வைகோ கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in