நகை கடையில் 500 கிராம் தங்கம், ரூ.11 லட்சம் கொள்ளை: முகமூடி கொள்ளையர்கள் தப்பி ஓட்டம்

நகை கடையில் 500 கிராம் தங்கம், ரூ.11 லட்சம் கொள்ளை: முகமூடி கொள்ளையர்கள் தப்பி ஓட்டம்
Updated on
1 min read

திருவல்லிக்கேணியில் நகைக் கடையில் 500 கிராம் தங்கம், ரூ.11 லட்சம் பணத்தை முகமூடி கொள்ளையர்கள் 4 பேர் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.

சென்னை திருவல்லிக்கேணி தேவராஜ் முதலி தெருவில் காதர் ஜெயின்(30) என்பவர் நகைக் கடை வைத்துள்ளார். தங்க நகைகள் போலியானவையா, அசலானவையா என கண்டுபிடிக்கும் நிறுவனத்தையும் அருகிலேயே நடத்தி வருகிறார். நகைக் கடையில் அக்சய்(18) என்ற இளைஞர் ஊழியராக வேலை செய்கிறார். நேற்று மதியம் அக்சய்யை மட்டும் கடையில் விட்டு விட்டு, அருகே இருக்கும் நகைக் கடைக்கு காதர் ஜெயின் சென்றார்.

அப்போது முகமூடி அணிந்த 4 பேர் திடீரென வந்து அக்சய்யை கத்தி முனையில் மிரட்டி, கடையில் இருந்த ரூ.11 லட்சம் பணம், 500 கிராம் தங்க நகைகளை கொள்ளையடித்தனர். பின்னர் தயாராக இருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி கொள்ளையர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.

கொள்ளையர்கள் சென்ற சிறிது நேரம் கடந்த பின்னர் அக்சய், திருடன், திருடன் என கத்திக் கொண்டே தனது உரிமையாளர் சென்ற கடையை நோக்கி ஓடி வந்துள்ளார். அதன் பின்னரே கொள்ளை நடந்த விஷயம் மற்றவர்களுக்கு தெரியவந்தது.

ஜாம்பஜார் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தடயங்களை சேகரித்தனர். கைரேகை நிபுணர்களும் வந்து சோதனை செய்தனர். மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. ஆனால் கொள்ளையர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. அருகே சில வீடுகள் மற்றும் நிறுவனங்களில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி உள்ளதா என போலீஸார் ஆய்வு நடத்தி வருகின்றனர். கடை ஊழியர் அக்சய் மீது போலீஸாரின் சந்தேகப் பார்வை திரும்பியுள்ளது. கொள்ளை குறித்து ஜாம் பஜார் காவல் நிலைய போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in