ஜெ. மறைவு ஏற்படுத்தியுள்ள வெற்றிடம் பாஜகவுக்கு சாதகம்: வெங்கய்ய நாயுடு

ஜெ. மறைவு ஏற்படுத்தியுள்ள வெற்றிடம் பாஜகவுக்கு சாதகம்: வெங்கய்ய நாயுடு
Updated on
1 min read

தமிழக அரசியல் களத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு ஏற்படுத்தியுள்ள வெற்றிடம் பாஜகவுக்கு சாதகம் என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

திங்கள்கிழமை சென்னையில் 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், "தமிழக அரசியல் களத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு ஏற்படுத்தியுள்ள வெற்றிடம் பாஜகவுக்கு சாதகம். ஜெயலலிதா இருந்தவரை அவரது ஆளுமையின் காரணமாக பாஜக ஆதரவாளர்கள்கூட அதிமுகவுக்கே வாக்களித்துவந்தனர். ஏனெனில் திமுக - அதிமுக இரண்டில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற நிலை வரும்போது அதிமுகவுக்கே மக்கள் வாக்களித்தனர். அதிமுகவின் தேசிய பார்வையை கருதி வாக்களித்தனர். ஆனால், ஜெயலலிதாவின் மறைவு அந்த நிலைமையை மாற்றியுள்ளது. அவரது மறைவு ஏற்படுத்தியுள்ள வெற்றிடம் பாஜகவுக்கு சாதகம்" எனத் தெரிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசியல் குறித்து பல்வேறு கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார். "ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது உடலைத் தோண்டி எடுத்து உடற்கூறு பரிசோதனை நடத்த நேரிடும் என்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளது அவரது கருத்து. நீதிபதிக்கென்று ஒரு கருத்து இருக்கலாம். நீதிமன்றத்தில் இருந்து நோட்டீஸ் வந்தால் அதற்கு மத்திய அரசு விளக்கம் அளிக்கும். ஜெயலலிதாவின் உடலைத் தோண்டி எடுத்து உடற்கூறு பரிசோதனை நடத்த வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.

சசிகலா முதல்வராக வேண்டும் என மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை அறிக்கை வெளியிட்டிருப்பது அவரது உட்கட்சி பிரச்சினை. ஆனால், மக்களவை துணைத் தலைவருக்கான ‘லெட்டர் பேட்’ பயன்படுத்தியிருப்பதை தவிர்த்திருக்கலாம்.

முதல்வரை தேர்வு செய்வது, கட்சியின் தலைவரை தேர்வு செய்வது அதிமுகவின் உட்கட்சி விவகாரம். பாஜகவைப் பொறுத்தவரை மற்ற கட்சிகளின் உள் விவகாரங்களில் ஒருபோதும் தலையிடுவதில்லை. ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக தேர்வு செய்யப்பட்டதில் மத்திய அரசின் தலையீடு எதுவும் இல்லை" என அவர் தெரிவித்திருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in