கடலூர் ஆட்சியர், வட்டாட்சியர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்துவைப்பு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

கடலூர் ஆட்சியர், வட்டாட்சியர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்துவைப்பு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

கடலூர் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்து உத்தரவிட்டது.

கடலூரைச் சேர்ந்த அன் பழகன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:

கடலூரில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 4.10.13-ல் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அந்த உத்தரவை கடலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார், வட்டாட்சியர் வி.எஸ்.மோகன் ஆகியோர் மதித்து நடக்க வில்லை. இதனால்தான் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டது. எனவே, அவர்கள் இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்புக்காக நடவடிக்கை எடுக்க வேண்டும்

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார் அக்னிஹோத்ரி, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோரைக் கொண்ட அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வட்டாட்சியர் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மனுதாரர் குற்றம்சாட்டிய குளத்துக்கு அருகேயுள்ள ஆக்கிரமிப்புகள், விவசாயத்துக்கு தண்ணீர் செல்லும் கால்வாய் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த ஆக்கிரமிப் புகள் முழுமையாக அகற்றப்பட்டு விட்டன. தற்போது, எந்த ஒரு இடத்திலும் ஆக்கிரமிப்புகள் இல்லை’ என கூறியிருந்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், கடலூர் ஆட்சியர், வட்டாட்சியர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in