

அதிமுக சசிகலா அணியின் சார்பில் ஆர்.கே.நகரில் போட்டி யிடும் வேட்பாளர் இன்று அறிவிக்கப்படுகிறார்.
ஜெயலலிதா மறைவால் காலி யாக உள்ள ஆர்.கே.நகர் சட்டப் பேரவை தொகுதிக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை (16-ம் தேதி) தொடங்குகிறது. இந்தத் தேர்தலில் அதிமுகவில் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி மற்றும் திமுக, தேமுதிக, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என பலமுனைப் போட்டி உருவாகியுள்ளது.
அதிமுக சசிகலா அணி வேட் பாளரை தேர்வு செய்வதற்காக, அந்த அணியின் ஆட்சி மன்றக் குழு இன்று காலை கூடுகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலு வலகத்தில் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் நடக்கும் கூட் டத்தில் செங்கோட்டையன் உள்ளிட்ட ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.
ஆர்.கே.நகரில் டிடிவி தின கரனே போட்டியிடலாம் என கூறப்பட்டது. ஆனால், தற் போதைய அரசியல் சூழலை கருத்தில்கொண்டு அவர் மறுத்து விட்டதாகவும், இருப்பினும் மூத்த நிர்வாகிகள் அவரை தொடர்ந்து வற்புறுத்தி வருவதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவித் தன. தினகரன் இல்லாவிட்டால், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவை நிறுத்த வாய்ப்புள்ள தாக அதிமுக தரப்பில் கூறப்படுகிறது. ஜெயலலிதா வின் அண்ணன் மகள் தீபா களமிறங்கியுள்ளதால், அவ ருக்குப் போட்டியாக எம்ஜிஆரின் வளர்ப்பு மகள் சுதாவை களமிறக்குவதற்கான பேச்சு வார்த்தையும் நடந்து வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரி வித்தன.
ஓபிஎஸ் தலைமையில் ஒரு குழுவினர் இன்று டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையரை சந்திக்க உள்ளனர். இதன்மூலம், இரட்டை இலை சின்னம் தங் களுக்கு கிடைக்கும் என ஓபிஎஸ் தரப்பு நம்புகிறது. எனவே, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை எதிர்பார்த்தே வேட்பாளரை தின கரன் அறிவிப்பார் என அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
எம்எல்ஏக்கள் கூட்டம்
இதற்கிடையே, தமிழக சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. இதையொட்டி இன்று மாலை 5.30 மணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம், கட்சித் தலைமை அலுவலகத்தில் தினகரன் தலைமையில் நடக்கிறது. இதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்கின்றனர். பேரவையில் எவ்வாறு நடந்துகொள்வது என்பது குறித்து விவாதிக்கப்பட்டு, எம்எல்ஏக்களுக்கு ஆலோசனை வழங்கப்படலாம் எனத் தெரி கிறது. மேலும், பேரவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதற்காக திமுக தரப்பில் கடிதம் அளிக்கப் பட்டுள்ளது. அது தொடர்பாகவும் எம்எல்ஏக்களுக்கு ஆலோசனை கள் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.