

போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வலியுறுத்தி தொ.மு.ச. பேரவை சார்பில் பிப்ரவரி 4-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
இதுதொடர்பாக தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவை (தொ.மு.ச.) பொதுச் செயலாளர் மு.சண்முகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் 12-வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனே தொடங்கவும், 11-வது ஊதிய ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
அரசு மற்றும் போக்குவரத்து நிர்வாகம் பிடிவாதப் போக்கை கடைபிடிப்பதால் தொழிலாளர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் விதமாக கடந்த டிசம்பர் 30-ம் தேதி தொ.மு.ச. பேரவையில் இணைந்த போக்குவரத்துக் கழக கூட்டமைப்பு சார்பாகவும், பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் சார்பாகவும் வேலை நிறுத்த அறிவிப்பு அளித்துள்ளோம். அதன் அடிப்படையில் தொழிலாளர் துறை சமரச நடவடிக்கையாக ஜனவரி 22-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தது. பின்னர் நிர்வாக காரணங்களைக் கூறி பேச்சுவார்த்தையை ஜனவரி 28-ம் தேதிக்கு மாற்றினர்.
தற்போது அதே காரணங்களைக் கூறி மீண்டும் பேச்சுவார்த்தையை தள்ளி வைத்துள்ளனர்.
மேலும் வேலை நிறுத்த அறிவிப்பைக் காரணம் காட்டி வார ஓய்வு ரத்து, விடுப்பு மறுப்பு, பணி விடுப்பு மறுப்பு போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இது தொழிலாளர்களிடையே தேவையற்ற குழப்பத்தையும், கொந்தளிப்பையும் உருவாக்கி உள்ளது.
தமிழக அரசு மற்றும் போக்குவரத்துக் கழக நிர்வாகங்களின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டிக்கும் வகையில் அனைத்துப் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு வரும் 4-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.