Published : 11 Jan 2014 08:50 AM
Last Updated : 11 Jan 2014 08:50 AM

என்னை விட்டுவிடுங்கள்; ஒதுங்கிப்போய் விடுகிறேன்- அழகிரியை கண்டித்து கருணாநிதியிடம் சீறிய ஸ்டாலின்

`கட்சிக் கட்டுப்பாட்டை குலைப் பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று இரண்டு நாட்களுக்கு முன்பு கருணாநிதி சொன்னதை சாதாரணமாக எடுத்துக் கொண்டனர் அழகிரி விசுவாசிகள். ஆனால், அதை செயலிலும் காட்ட வைத்திருக்கிறார் ஸ்டாலின்.

கட்சித் தலைமையை விமர்சித்து அழகிரி அளித்த பேட்டி குறித்து திருச்சியில் நிருபர்கள் கேட்டதற்கு, ’’நான் தேவையற்றதைப் பார்ப்பதும் கிடையாது; கேட்பதும் கிடையாது’’ என்று பதிலளித்தார் ஸ்டாலின். வெளிப்படையாக இப்படிச் சொல்லிவிட்டாலும் அழகிரியின் பேட்டி ஸ்டாலினை ரொம்பவே காயப்படுத்திவிட்டதாகச் சொல்கிறார்கள்.

இதுகுறித்து தி.மு.க. வட்டாரத்தி லிருந்து `தி இந்து’விடம் பேசியவர்கள், ``அழகிரியின் பேட்டி குறித்து தனக்கு நெருக்கமான வர்களிடம் காட்டமாகப் பேசிய ஸ்டாலின், `இதற்கு மேல் என்னால் பொறுமையாக இருக்க முடியாது. நான் ஊர் ஊராய் சுற்றி கட்சி வளர்ப்பேன். இவர், இருந்த இடத்தில் இருந்துகொண்டு எதை யாவது பேசி கட்சிக்குள் கலகம் செய்வாரா? இனியும் அவரது நடவடிக்கைகளை அனுமதிப்பதாக இருந்தால் என்னை விட்டு விடுங்கள்; ஒதுங்கிப் போய்விடுகிறேன்’ என்று சொல்லி இருக்கிறார்.

அழகிரியின் கோபத்துக்கு ஆளான முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவரை கோபாலபுரத்துக்கு அனுப்பி தலைவரிடம் இந்தச் செய்தியை அப்படியே சொல்ல வைத்திருக்கிறார். ஸ்டாலினின் கருத்தை மறுக்க முடியாத தலைவரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக சொல்லி இருக்கிறார்.

இதையடுத்து, அழகிரி விஷயத்தில் தலைவர் கோபமாக இருக்கிறார். அழகிரி மீதே அவர் நடவடிக்கை எடுத்தாலும் எடுக்கலாம் என்று செய்திகள் பரவியதால், அழகிரியையும் ஸ்டாலினையும் சமாதானப்படுத்தி வைப்பதற்காக தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த சிலர் களம் இறங்கினர். செல்வி, தயாநிதி மாறன், காந்தி அழகிரி, அழகிரியின் மகள் கயல்விழி உள்ளிட்டவர்கள் சமாதானத் திட்டத்தை தீட்டினர். இதன்படி காந்தியும் கயல்விழியும் அழகிரியை அழைத்துக் கொண்டு புதன்கிழமை காலை கோபாலபுரம் சென்றனர். ஆனால், அப்போதும் தலைவர் சமாதானமடையவில்லை. கயல்விழியும் காந்தியும்தான் தலைவரைப் பார்க்க மாடிக்குப் போனார்கள். அழகிரி கீழேயே அமர்ந்துவிட்டார். அவரை மேலே வரும்படி தலைவரும் சொல்லவில்லை; அவரும் போகவில்லை. மருமகளும் பேத்தியும் சொன்ன விஷயங்களை கேட்டுக்கொண்ட தலைவர், பிடிகொடுக்காமலேயே இருவரை யும் வழியனுப்பி வைத்திருக்கிறார்.

இதற்கிடையில், அழகிரி விசுவாசிகள் மதுரைக்குள் மறுபடியும் போஸ்டர்களை ஒட்டி ஸ்டாலினை சீண்டிவிட்டனர். இதையடுத்துத்தான் ஸ்டாலின், வியாழக்கிழமை காலை தலைவரைச் சந்தித்து தனது மனக்குமுறலை நேருக்கு நேராக கொட்டித் தீர்த்திருக்கிறார். `தொடர்ந்து நான் கட்சிப் பணிகளை கவனிக்க வேண்டும் என்றால் இந்த நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று ஸ்டாலின் கடுமை காட்டிய பிறகுதான் மன்னன் உள்ளிட்டவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள்’’ என்று சொன்னார்கள்.

அழகிரிக்கு முன்னெச்சரிக்கை

அழகிரி மீது நடவடிக்கை எடுத்தால் அது தேர்தல் நேரத்தில் பிரளயத்தை உண்டாக்கலாம் என்பதால் அழகிரியின் வலதுகரமான மன்னன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகச் சொல்பவர்கள், ``யார் மீதும் நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டோம்’ என அழகிரியை எச்சரிக்கும் விதமாகத்தன் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது தலைமை’’ என்கிறார்கள். இதனிடையே, வெள்ளிக்கிழமை காலையில் மதுரை செல்வதாக இருந்த அழகிரிக்கு அவரது ஆதர வாளர்கள் விமான நிலையத்தில் தடபுடலாக வரவேற்பு கொடுக்கத் தயாரானார்கள்.

அதை எல்லாம் தவிர்க்கச் சொல்லிவிட்டாராம் அழகிரி. ஆனாலும், இந்நிலையில் மதுரைக்குப் போய் தேவையற்ற சச்சரவுகளுக்கு ஆளாக வேண்டாம்’ என்று குடும்பத்தினர் அட்வைஸ் செய்ததால் வெள்ளிக்கிழமை மதுரைப் பயணத்தை ஒத்திவைத்து விட்டாராம் அழகிரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x