

காவிரி நீருக்காக தமிழகமும் கர்நாடகாவும் காலம்காலமாக முட்டிக் கொண்டிருக்கின்றன. ஆனால், கன்னடர் - தமிழர் கூட்டு முயற்சியில், குடகு மாவட்டத்தில் காவிரித் தாய்க்கு மணிமண்டபம் கட்டி, 12 அடி உயர சிலை வைத்து குடமுழுக்கு நடத்தி இருக்கிறார்கள்.
அகத்திய முனிவரின் கமண்டலத்தை காகம் தட்டிவிட்டதால் அதிலிருந்த நீர் கொட்டி விரிந்து ‘காவிரி’ உருவானதாக புராணம் சொல்கிறது. குடகில் குட்டிக் குழந்தையாய் பிறக்கும் காவிரி நதி, அகன்ற காவிரியாகி கர்நாடகத்துக்கும் தமிழகத்துக்கும் உயிர் நாதமாய் ஓடிக் கொண்டிருக்கிறது. அகன்ற காவிரி தொடங்கும் இடத்தில்தான் காவிரித் தாய்க்கு மணிமண்டபம் கட்டி சிலை வைத்திருக்கிறார்கள்.
15 ஆயிரம் ஏக்கரில் காபி
இந்தக் கூட்டு முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட எஸ்.எல்.என்.எஸ்.நாராயணன் செட்டியார், காரைக்குடியைச் சேர்ந்த தமிழர். ‘‘குடகு மாவட்டத்தில் தமிழர்களுக்கு 15 ஆயிரம் ஏக்கருக்கு மேல் காபி தோட்டங்கள் இருக்கிறது.
கர்நாடகத்தில் விளையும் காபியின் வளமையில் காவிரிச் சாரலுக்கும் முக்கியப் பங்கு உண்டு. அதனால், கர்நாடகாவில் காபி எஸ்டேட் வைத்திருக்கும் தமிழர்கள், தங்கள் வீட்டு பூஜை அறைகளில் காவிரித் தாயை வைத்து வணங்குகின்றனர்’’ என்று முன்னுரை கொடுத்த நாராயணன், தொடர்ந்து சிலை வைத்த கதையை சொன்னார்.
குஜால் நகர் கூர்க்கீஸ்
குடகு மாவட்ட எல்லையில் தலைக் காவிரியிலிருந்து 90 கி.மீ. தொலைவில் இருக்கு குஜால் நகர். இங்குள்ள கூர்க்கீஸ் மக்கள், காவிரித் தாய்க்கு சிலை வைக்கிறதுக்காக வருசக் கணக்கா முயற்சி பண்ணிருக்காங்க. மைசூர் - மடிக்கரை நான்கு வழிச்சாலையில் அகன்ற காவிரி தொடங்கும் இடத்தில் காவிரித் தாய்க்கு மணிமண்டபம் கட்ட அடித்தளம் எல்லாம் போட்டுட்டாங்க. ஆனா, அதுக்கு மேல அவங்கக்கிட்ட நிதி ஆதாரம் இல்ல.
எங்களுக்கு குடகு மாவட்டத்துல காபி உள்ளிட்ட பத்துவிதமான தொழில்கள் இருக்கு. என் மவனுங்கதான் அதை எல்லாம் கவனிக்கிறாங்க. காவிரித் தாய்க்கு மணிமண்டபம் கட்டும் பணி பாதியில் நிற்பதை என் மவன்ககிட்ட கூர்க்கீஸ் மக்கள் சொல்லியிருக்காங்க. பசங்க என்கிட்ட பேசுனாங்க. ‘நாமே முன்னின்று மிச்ச வேலைகளை முடிச்சுக் குடுப்போம்’னு சொல்லிட்டேன்.
12 அடி உயர சிலை
கடந்த பத்து வருசத்துல செட்டிநாட்டுப் பகுதியில் இதுவரை பத்துக் கோயில்களுக்கு திருப்பணி செஞ்சிருக்கோம். அந்த அனுபவம் இருந்ததால மளமளன்னு வேலைகள் நடந்துச்சு. காவிரித் தாய்க்கு 12 அடி உயர ஒற்றை கருங்கல் சிலையை வாலாஜாபேட்டையில் செஞ்சோம். காரைக்குடிக்கு பக்கத்துல இருக்கிற தளக்காவூரில் இருந்து ஸ்தபதிகளை கூட்டிட்டுப் போயி மணிமண்டபத்தைக் கட்டி முடிச்சோம். மஹாளய அமாவாசை அன்னைக்கி சிலையை பிரதிஷ்டை செய்தோம். ஐப்பசி முதல் தேதிதான் தலைக்காவிரியில் காவிரி பொங்கி வருவதாக ஐதீகம். அதனால, அதே தேதியில் குடமுழுக்கு நடத்த நாள் குறிச்சோம். நினைத்தபடி எல்லாம் நல்லபடியாகவே நடந்தது.
காவிரி பொங்கும் நாளில் திருவிழா
கர்நாடகாவில் பிருந்தாவனிலும் மடிக்கரையிலும் காவிரித் தாய்க்கு சிலை வெச்சிருக்காங்க. ஆனா, அதெல்லாம் ஆறடி உயரம் தான். நாம் வைத்திருப்பது 12 அடி உயரம்.
மணிமண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் அமைஞ்சிருக்கறதால அந்த வழியாக போறவங்க, வாகனங்களை நிறுத்தி காவிரித் தாயை வணங்கிட்டுப் போறாங்க. எங்க செலவிலேயே அங்கே அர்ச்சகர் ஒருவரை நியமிச்சிருக்கோம். பவுர்ணமிதோறும் அபிஷேகம் நடக்குது.
அடுத்தகட்டமா, ஆண்டுதோறும் ஐப்பசி முதல் தேதியில் காவிரித் தாய்க்கு திருவிழா நடத்த தீர்மானிச்சிருக்கோம்… சிலாகிப்புடன் சொல்லி முடித்தார் நாராயணன் செட்டியார்.