

இதயம், சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட 2 பெண்களுக்கும் ராயபுரம் ஆர்எஸ்ஆர்எம் அரசு மருத்துவ மனையில் பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.
திருச்சியை சேர்ந்தவர் ஜமுனா(25). இவருக்கு சிறு வயதில் இருந்தே இதயத்தில் ஓட்டை மற்றும் ரத்தக் குழாய் அடைப்பு இருந்தது. இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் இதயமாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். கடந்த 4 ஆண்டுகள் முன்பு திருமணம் ஆனது. இவர் கருவுற்று, திருச்சி மகப்பேறு மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண் டிருந்தார். ஜமுனாவுக்கு மேலும், சிறப்பு மருத்துவ வசதிகள் வழங்கும் வகையில் ராயபுரத்தில் உள்ள அரசு ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இதையடுத்து, அவர் ஆர்எஸ் ஆர்எம் மருத்துவமனையில் 37 வாரங்களுக்கு தொடர்ந்து சிகிச்சை மற்றும் மருத்துவக் கண்காணிப்பில் ஈடுபடுத்தப் பட்டார். இந்நிலையில், கடந்த 23-ம் தேதி ஜமுனாவுக்கு சிசேரியன் மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதேபோல், சூர்யகலா என்ற இளம் பெண் கடந்த 2013-ல் சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார். 2015-ம் ஆண்டில் திருமணம் ஆனது. இதையடுத்து, அவரும் ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனை யில் 34 வாரங்களுக்கு தொடர்ந்து சிகிச்சை மற்றும் மருத்துவக் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டார். இந்நிலையில், கடந்த மாதம் 4-ம் தேதி சூர்யகலாவுக்கு சிசேரியன் மூலம் பெண் குழந்தை பிறந்தது.
இது தொடர்பாக ஆர்எஸ் ஆர்எம் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் (பொறுப்பு) டாக்டர் கே.கலைவாணி கூறும் போது, ‘‘இளம் வயதில் இதயம், சிறுநீரகம் போன்ற மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் திருமணம் செய்துகொண்டு கருவுற்ற பிறகு பிரசவத்தின்போது பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, அந்தந்த சிறப்புப் பிரிவு மருத்துவர்களை ஆலோ சித்த பிறகே, சிசேரியன் மேற் கொள்ள வேண்டிய சூழல் இருக் கிறது. குறிப்பாக சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்ணுக்கு சிசேரியன் மூலம் குழந்தை பிறந்தது ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் இதுவே முதல் முறையாகும்’’ என்றார்.
இந்த சந்திப்பின்போது, ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனை டாக்டர்கள் ராஜலட்சுமி, அனிதா ஆகியோர் உடனிருந்தனர்.