

சத்தியமூர்த்தி பவனை, வாசன் அணியினர் கைப்பற்றி விடக்கூடாது என்பதற்காகவே, புதிய தலைவரை கட்சி மேலிடம் உடனடியாக அறிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த பி.எஸ்.ஞானதேசிகன், கடந்த 30-ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். கட்சியின் தேசிய தலைமை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் ஜி.கே.வாசனும் இந்த முடிவை வரவேற்றார். வாசன் ஆதரவாளர்களால் மட்டுமே பிரச்சினை எழுப்பப்படுவதாக காங்கிரஸ் மேலிடத்துக்கு தெரியவந்தது. இதையடுத்து, புதிய தலைவராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநில தலைவர் நியமனத்தில் கட்சித் தலைமை இதுவரை இப்படி உடனடியாக முடிவை எடுத்ததில்லை. தற்போது அவசர கதியில் முடிவு எடுக்கப்பட்டதன் பின்னணி குறித்து, காங்கிரஸ் வட்டாரங்களில் கிடைத்த தகவல்கள் வருமாறு:
ஞானதேசிகன் ராஜினாமா செய்ததும், தமிழக காங்கிரஸ் முக்கியத் தலைவர்களான எம்.கிருஷ்ணசாமி, ப.சிதம்பரம், தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங் கோவன், பிரபு, பீட்டர் அல்போன்ஸ் போன்றவர்களுடன் மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் மூலம் 2 நாட்களாக ஆலோசனை நடத்தினர்.
கட்சி உறுப்பினர் அட்டையில் மூப்பனார் படம் இருக்க வேண்டும் என்ற வாசன் தரப்பு கோரிக்கைக்கு அனைத்து தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், மேலிடம் எந்த முடிவு எடுத்தாலும் தாங்கள் கட்டுப்படுவதாக தெரிவித்துள் ளனர். தற்போதைய அரசியல் சூழ்நிலையில் திமுக, அதிமுக மற்றும் பாஜகவுக்கு சரியான பதிலடி கொடுக்கும் வகையில், வலுவான தலைவரை நியமிக்க வேண்டும்.
அவர் எந்தக் கோஷ்டியையும் சேராதவராக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்தது. அதன்படி, அனைத்து கோஷ்டித் தலைவர்களிடமும் பேசி, தலைவ ராக்க இளங்கோவனை முடிவு செய்தது. இதற்கு ப.சிதம்பரம் மற்றும் தங்கபாலு உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தரப்பில் முழு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, வாசன் அணியினர் கட்சி மேலிடத்தை தீவிரமாக விமர்சிக்கத் தொடங்கியிருப்பது, அவர்கள் வேறு முடிவில் இருப்பதாக சந்தேகத்தை எழுப்பியுள்ளது. 1996-ல் தமிழ் மாநில காங்கிரஸை மூப்பனார் தொடங்கியபோது, காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்திய மூர்த்திபவனை கைப்பற்றிக் கொண்டனர். அதனால், காங்கிரஸுக்கு அலுவலகம் இல்லாமல் பல்வேறு இடங்களில் வாடகை கட்டிடங்களில் செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதுபோல், வாசன் தரப்பினர் தற்போது புது கட்சி தொடங்கினால், சத்தியமூர்த்தி பவனை கைப்பற்றிவிடக் கூடும் என மேலிடத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால்தான், இளங்கோவனை புதிய தலைவ ராக அவசரமாக அறிவித்தது. இதுகுறித்து டெல்லியிலிருந்து போனிலேயே இளங்கோவனுக்கு தகவல் அளித்துள்ளனர். சென்னை மாவட்டத் தலைவர்களையும் தொடர்புகொண்டு, உடனடியாக சத்தியமூர்த்தி பவனுக்கு கட்சியின ருடன் சென்று, இளங்கோவனுக்கு வாழ்த்து தெரிவிப்பதுடன், வாசன் அணியினர் வசமுள்ள அலுவலகத்தை, தங்கள் கட்டுப் பாட்டில் கொண்டுவர வேண்டும் என்றும் கட்டளையிட்டுள்ளனர். மேலிட உத்தரவின்படியே, புதிய தலைவர் இளங்கோவன் உடனடி யாக பதவியேற்க உள்ளார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
சென்னையை இழந்த வாசன் அணி
முன்னாள் அமைச்சர் ஜி.கே.வாசனின் ஆதரவாளர்கள், மூப்பனார் காலம் முதல் சென்னையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். தற்போது சென்னையில் மூன்று மாவட்டத் தலைவர்களும் வாசன் அணியில் இல்லை. வடசென்னை மாவட்டத் தலைவர் ராயபுரம் மனோ, மூப்பனார் மீதும் வாசன் மீதும் தீவிர விசுவாசமாக இருந்தார். ஆனால், வாசனிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், ஓராண்டுக்கு முன்பே வெளியேறி தனியாக செயல்படுகிறார்.
தென் சென்னை மாவட்டத் தலைவர் கராத்தே தியாகராஜன், ப.சிதம்பரத்தின் ஆதரவாளராவார். மத்திய சென்னை மாவட்டத் தலைவர் ரங்கபாஷ்யம் இளங்கோவனின் விசுவாசி. தமிழகத்தில் கட்சி ரீதியாக மொத்தமுள்ள 59 மாவட்டங்களில், சுமார் 18 மாவட்டங்களில் வாசன் ஆதரவாளர்களே முக்கியப் பதவிகளில் உள்ளனர்.