

நாகை கடற்கரையில் நேற்று நடைபெற்ற 21-ம் ஆண்டு சுனாமி நினைவு தின நிகழ்ச்சியில் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்திய இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி.யான செல்வராஜ், திமுக முன்னாள் அமைச்சர் மதிவாணன் உள்ளிட்டோர்.
நாகப்பட்டினம் / மயிலாடுதுறை: நாகை, மயிலாடுதுறை மாவட்ட கடற்கரையோர பகுதிகளில் 21-ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. 2004-ம் ஆண்டு டிச. 26-ம் தேதி ஏற்பட்ட சுனாமி பேரலையில் தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
குறிப்பாக, நாகை மற்றும் வேளாங்கண்ணி பகுதிகளில் மட்டும் 6,065 பேர் உயிரிழந்தனர். அந்த மறக்க முடியாத வடுவாகிப் போன சுனாமி தாக்கி நேற்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது.
21-ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு, நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் மீனவர்கள், வணிகர்கள், பொதுமக்கள், அருட் தந்தைகள், அருட்சகோதரிகள் உள்ளிட்டோர் அமைதிப் பேரணியாக 3 கி.மீ. தொலைவு சென்று, அங்குள்ள நினைவு ஸ்தூபியில் மலர்கள் தூவி, மெழுகுவத்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல, நாகை மாவட்டத்தில் உள்ள 25 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று கடலுக்குச் செல்லாமல், அந்தந்த மீனவக் கிராமங்களில் உள்ள நினைவு ஸ்தூபிகளில் அமைதிப் பேரணி சென்று மலர் வளையம் வைத்து மவுன அஞ்சலி செலுத்தினர்.
நாகை கடற்கரையில் எம்.பி.செல்வராஜ், திமுக மாவட்டச் செயலாளர் கவுதமன், முன்னாள் அமைச்சர் மதிவாணன், வேளாங்கண்ணியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், ஜெயபால், ஜீவானந்தம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினரும் அஞ்சலி செலுத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி, பூம்புகார், திருமுல்லைவாசல், பழையாறு, வானகிரி உள்ளிட்ட 28 மீனவக் கிராமங்களிலும் சுனாமி நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
தரங்கம்பாடி பழைய ரயிலடி அருகே சுனாமியால் உயிரிழந்த 319 பேர்அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதேபோல, காரைக்கால் கடற்கரையில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.