

வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க., அணியில் ம.தி.மு.க.வுக்கு இடம் கிடைக்கும் என்று அக்கட்சி நிர்வாகிகள் நம்பினர். மது ஒழிப்பை வலியுறுத்தி, நடைபயணம் மேற்கொண்ட வைகோவை அந்த வழியாகச் சென்ற முதல்வர் ஜெயலலிதா சந்தித்துப் பேசியதால், கூட்டணி உறுதி என்ற நம்பிக்கை ம.தி.மு.க., வட்டாரத்தில் எழுந்தது.
ஆனால், அ.தி.மு.க., தனித்து போட்டியிடும் என்று ஜெயலலிதா அறிவித்ததால், ம.தி.மு.க.,வின் கூட்டணி கனவு கலைந்தது.
அ.தி.மு.க., தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கட்சிகளோடு இணைந்து தேர்தலை சந்திக்க முடியாத நிலையில் கடைசி வாய்ப்பாக பாஜகவை எதிர்பார்த்து வைகோ இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
'கூட்டணி குறித்து பேச இது உகந்த காலமில்லை' என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத ம.தி.மு.க., மாநில நிர்வாகி ஒருவர் கூறியதாவது: ஈரோடு, விருதுநகர், தூத்துக்குடி தொகுதிகளில் வைகோ முதல்கட்ட பிரசாரத்தை முடித்து விட்டார். இதில், ஈரோட்டில் கணேசமூர்த்தியும், விருதுநகரில் வைகோவும் போட்டியிடவுள்ளனர். இது தவிர, ஏற்கனவே நாங்கள் வெற்றி பெற்றுள்ள பொள்ளாச்சி தொகுதியிலும், வடசென்னை தொகுதியிலும் தேர்தல் பணியைத் தொடங்கியுள்ளோம்.
பா.ஜ., கூட்டணியில் ஏழு தொகுதிகளை எதிர்பார்க்கிறோம். ஐந்து தொகுதிகள் உறுதியாக கிடைக்கும் என்பதால், அந்த தொகுதிகளில் தேர்தல் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஈரோடு தொகுதியில் பிரசாரம் செய்த வைகோ வரும் 4, 5 தேதிகளில் கொடுமுடி மற்றும் வெள்ளகோவில் ஒன்றியங்களில் பிரசாரம் செய்யவுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.