தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்க: வாசன்

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்க: வாசன்
Updated on
1 min read

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய விவசாய கடன்கள் அனைத்தையும் காலம் தாழ்த்தாமல் தள்ளுபடி செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கடந்த ஆண்டு தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கிய சிறு, குறு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்து அறிவிப்பு வெளியிட்டது. அதில் 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படவில்லை.

எனவே இதனை எதிர்த்து தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் சார்பாக தொடரப்பட்ட வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியிடப்பட்டது.

இந்த தீர்ப்பில் வறட்சி பாதிப்பு என்பது அனைத்து விவசாயிகளுக்கும் தான் ஏற்பட்டுள்ளது. எனவே, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற அனைத்து விவசாயிகளின் கடன்களையும் பாரபட்சம் காட்டாமல் தள்ளுபடி செய்ய வேண்டும். என்று உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு இருக்கிறது.

மேலும் உத்தரப் பிரதேசத்தில் 36 ஆயிரத்து 359 கோடி விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய சமீபத்தில் பொறுப்பேற்ற அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

எனவே தமிழக அரசு உடனடியாக நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். நீதிமன்றம் உத்தரவிட்டு பிறகுதான் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று காத்திருக்காமல் விவசாயிகளின் நிலையை உணர்ந்து தமிழக அரசு செயல்பட வேண்டும்.

தமிழகத்தில் கடந்த 140 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. எனவே தமிழகத்தை வறட்சி மாநிலமாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஆனால் உரிய நிவாரண தொகையை மத்திய அரசு வழங்கவில்லை.

எனவே தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்டதை மத்திய அரசு வறட்சி மாநில பட்டியலில் வெளியிட்டு தமிழகத்திற்கு உரிய நிவாரண தொகையை வழங்கிட வேண்டும். மேலும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய விவசாய கடன்கள் அனைத்தையும் காலம் தாழ்த்தாமல் தள்ளுபடி செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in