சூறைக்காற்று, இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு: 19 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை

சூறைக்காற்று, இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு: 19 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை
Updated on
1 min read

தமிழகத்தின் உள் மாவட்டங்களான வேலூர், தருமபுரி, சேலம், திருச்சி, மதுரை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் சனிக்கிழமை ஓரிரு இடங்களில் சூறைக்காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் கடந்த 3 வாரங்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், பல நகரங்களில் வெள்ளிக்கிழமை வெப்பம் சற்று தணிந்து காணப்பட்டது. இருப்பினும் 11 நகரங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் கொளுத்தியது. இந்நிலையில், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் சூறைக்காற்றுடனும், இடியுடனும் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக உள் மாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய 19 மாவட்டங்களில் சூறைக்காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வெப்பநிலையைப் பொறுத்தவரை வெள்ளிக்கிழ்ழமை மாலை 5.30 மணிக்கு எடுக்கப்பட்ட வெப்பநிலை அளவின்படி அதிகபட்ச வெப்பநிலையாக கரூர் பரமத்தியில் 107.6, திருத்தணியில் 106.7, திருச்சியில் 105.98, பாளையங்கோட்டையில் 105.8, வேலூரில் 105.44, மதுரையில் 105.08, திருப்பத்தூரில் 104, சேலத்தில் 103.46, தருமபுரி மற்றும் கோவையில் தலா 100.4, சென்னையில் 100.04 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. மொத்தத்தில் நேற்று 11 நகரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெயில் கொளுத்தியது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in