

காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடகாவைக் கண்டித்து, புதுச்சேரி சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டுவராததால் அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக அரசை கண்டித்து பதாகைகளுடனேயே அதிமுக எம்எல்ஏக்கள் பேரவைக்குள் வந்தனர். பேரவைத் தொடங்கியவுடனேயே இதுதொடர்பான விவாதத்தை அதிமுக எழுப்பியது.
அன்பழகன் (அதிமுக): காவிரி நீரை தரக்கோரி தமிழகம் வழக்கு தொடர்ந்துள்ளது. புதுச்சேரி அரசும் வழக்கில் இணைத்துள்ளது. நீதிமன்றம் உத்தரவிட்டும் கர்நாடக அரசு தண்ணீர் வழங்க மறுக்கிறது. தமிழக, காரைக்கால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். விவசாயிகள் நலன் கருதி, தமிழகத்துக்கான நீரை தரமறுக்கும் கர்நாடக அரசையோ, மத்திய அரசை வலியுறுத்தியோ தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இது முக்கிய பிரச்சினை.
முதல்வர் நாராயணசாமி: மாற்று கருத்து இல்லை. நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இடைக்கால உத்தரவுப்படி நீரை பெற நடவடிக்கை எடுத்துள்ளனர். புதுச்சேரி அரசும் மனு தாக்கல் செய்து 6 டிஎம்சி பெற நடவடிக்கை எடுத்துள்ளது. நம் உரிமையை கேட்கிறோம். கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு இருந்தாலும் இடைக்கால உத்தரவை நிறைவேற்ற வேண்டும். புதுவை மாநிலத்து காரைக்கால் விவசாயிகள் உரிமையை விட்டுத்தர மாட்டோம்.
அன்பழகன்: தீர்மானம் கொண்டு வருவீர்களா?
முதல்வர்: கேள்வி நேரம் முடிந்த பின் நாங்கள் இப்பிரச்சினைக்கு பதில் தருவோம்..
அன்பழகன்: விவசாயிகள் நலனில் அக்கறை இல்லை. அதனால் வெளிநடப்பு செய்கிறோம்.