

கடந்த ஆண்டு டிசம்பர் 16-ல் டெல்லி யில் மருத்துவ மாணவி பேருந்தில் 6 நபர்களால் பாலியல் வன்முறை செய்யப்பட்டார். பெரும் அதிர் வலைகளை உண்டாக்கிய இந்தச் சம்பவத்தையடுத்து, பெண்களுக்கு எதிரான குற்றங்களையும் அதற்கான தண்டனைகளையும் வகைப்படுத்த நீதிபதி ஜே.எஸ்.வர்மா தலைமையில் மூவர் கமிஷன் அமைக்கப்பட்டது.
80 ஆயிரம் பேரிடம் கருத்துக் கேட்பு
இந்தக் குழு சுமார் 80 ஆயிரம் பேரிடம் கருத்துகளைக் கேட்டது. நிறைவாக மார்ச் 19-ல் தனது பரிந் துரை அறிக்கையை தாக்கல் செய் தது. இது அவசர சட்டமாக்கப் பட்டதுக்கு ஏப்ரல் 2-ல் ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். பிப்ரவரி 3-லிருந்து முன் தேதியிட்டு சட்டம் அமலுக்கு வந்தது. ஆனால், இந்தச் சட்டம் சரிவர பிரயோகிக்கப்பட வில்லை என்கிறது ‘எவிடென்ஸ்’ அமைப்பு.
இதுகுறித்து ‘தி இந்து’வுக்கு பேட்டியளித்த ‘எவிடென்ஸ்’ திட்ட இயக்குநர் திலகம் கூறியதாவது: குற்றவாளிகளுக்கு 20 வருடம் முதல் ஆயுள் தண்டனை வரை கொடுக்கலாம் என்பதை ஆயுள் தண்டனையை மரண தண்டனையாக திருத்தியது அரசு. ராணுவ சிறப்பு அதிகாரச் சட்டத்தினால் பெண்கள் பாதிக்கப்படும் இடங்களில் அரசு இயந்திரம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் குற்றவாளிகள் தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும். அரசு அதிகாரிகள் பாலியல் குற்றங்களில் ஈடுபடும்போது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத உயர் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றெல்லாம் வர்மா கமிஷன் சொல்லியிருந்தது. ஆனால், இதையெல்லாம் நிராகரித்துவிட்டது மத்திய அரசு.
கீழ்மட்ட அளவில் நடவடிக்கை இல்லை
இதுமட்டுமல்ல; ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் என்பதை, ‘காயத்துக்கு தகுந்த அளவு நஷ்டஈடு’ எனத் திருத்தினார் கள். மிக முக்கியமான கொடூர குற்றங்களுக்கு சிறப்பு நீதிமன்றங் களை அமைத்து 2 மாதங்களுக்குள் தீர்ப்புச் சொல்ல வேண்டும் என்பது வர்மாவின் பரிந்துரை. ஆனால், டெல்லி மாணவி வழக்கிலேயே 8 மாதங்கள் கழித்துத்தான் தீர்ப்புச் சொல்லப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர் தருண் தேஜ் பால், நீதிபதி கங்குலி மீது பாலியல் குற்ற வழக்குகள் பதிவானதற்கு வர்மா கமிஷன் பரிந்துரைதான் முக்கிய காரணம். மேல்மட்ட அளவில் நடக்கும் குற்றங்களுக்கு மட்டுமே வர்மா கமிஷன் சிபாரிசுப் படி நடவடிக்கை பாய்கிறது. கீழ் மட்டத்தில் வழக்கமான நடைமுறை களே தொடர்வது அவலத்திலும் அவலம்.
முதல்வருக்கும் டி.ஜி.பி-க்கும் கடிதம்
தமிழகத்தில் 2013-ம் ஆண்டு அக்டோபர் வரை 778 பாலியல் வன்முறை சம்ப வங்கள் நடந்திருக்கின்றன. இதில் எதிலுமே வர்மா கமிஷன் சிபாரிசுப்படி நடவடிக்கை எடுக்கவில்லை. காரணம் காவல்துறை, அரசு நிர்வாகம், மருத்துவத்துறை அதிகாரிகளுக்கு இதுகுறித்து உரிய பயிற்சிகள் அளிக்கப்படவில்லை. உரிய முறை யில் இதை அமலாக்காவிட்டால், வர்மா கமிஷன் என்பது டெல்லி மாணவி வழக்கில் கொந்தளிப்பை அடக்க பயன்பட்ட கருவியாக மட்டுமே அமைந்துவிடும். இது தொடர்பாக தமிழக முதல்வருக்கும் டி.ஜி.பி-க்கும் கடிதம் எழுதி இருக்கிறோம்” என்றார் திலகம்.