நான் செய்த சாதனைகள் மறைக்கப்படுகின்றன: மு.க.அழகிரி

நான் செய்த சாதனைகள் மறைக்கப்படுகின்றன: மு.க.அழகிரி
Updated on
1 min read

மதுரையில் சர்வதேச விமான நிலையம் அமைய நடவடிக்கை, மதுரை மாவட்ட மக்களுக்கு வைகை, காவிரி குடிநீர் கிடைக்க வழிவகுத்தது உள்ளிட்ட நான் செய்த எத்தனையோ சாதனைகள் மறைக்கப்பட்டு வருகின்றன என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறினார்.

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி இன்று திமுக தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரியை மதுரையிலுள்ள அவரது வீட்டில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது திட்டமிடப்பட்டு, நீண்ட காலமாக செயல்படுத்தப்படாமல் இருந்த மதுரை சென்ட்ரல் மார்க்கெட் இடமாற்றத் திட்டத்தை நான் செய்து முடித்தேன். மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்ற பின் மதுரை மக்களின் வசதிக்காக 14 இடங்களில் இலவசக் கழிப்பிடங்களை அமைத்துக் கொடுத்தேன். ஆனால் இந்த அரசு அவற்றை கட்டணக் கழிப்பிடங்களாக மாற்றி விட்டது.

மேலூரில் மூடிக்கிடந்த கூட்டுறவு நூற்பாலையில் கிரானைட் பாலீஷ் தொழிற்சாலையை உருவாக்கினேன். 12 ஆண்டுகளாக மூடிக்கிடந்த ஸ்பிக் தொழிற்சாலையை மீண்டும் செயல்பட வைத்தேன். வாடிப்பட்டியில் ஜவுளிப் பூங்கா அமைத்தேன். மதுரையில் அண்ணா பல்கலைக்கழக மண்டல அலுவலகம் அமைத்தேன். அதை இப்போது மாற்றி விட்டார்கள்.

தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஒரு அரசு பாலிக்டெக்னிக் என்ற அரசின் சட்டத்தை மாற்றி, மதுரையில் 2 பாலிடெக்னிக் கல்லூரிகள் அமைய நடவடிக்கை மேற்கொண்டேன். 4 ஒன்றியங்களில் சமுதாயக்கூடம், செல்லூர், மதுரை எல்லீஸ் நகர் பாலம் போன்றவை விரைவாக அமைய முயற்சி மேற்கொண்டேன்.

அத்துடன் மதுரையில் சர்வதேச விமான நிலையம் அமைய நடவடிக்கை மேற்கொண்டேன். மதுரை மாவட்ட மக்களுக்கு வைகை, காவிரி குடிநீர் கிடைக்க வழிசெய்தேன். இதுபோல் நான் செய்த எத்தனையோ சாதனைகள் மறைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அவை மக்களுக்குத் தெரியும்.

தமிழகத்தில் தற்போதுள்ள அரசு ஏதாவது செய்தால்தானே அதைப் பற்றி கருத்து கூற முடியும். ஆனால் இந்த அரசு எதுவுமே செய்யவில்லையே. என்னைப் பழிவாங்கும் நடவடிக்கையை மட்டும்தான் செய்கின்றனர்.

கூரையே இல்லாத கட்டிடங்களில் எல்லாம் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் எனது கல்லூரிக்கு அனுமதி மறுத்துள்ளனர். நான் ஒதுக்கிய தொகுதி மேம்பாட்டு நிதியை மாவட்ட, மாநகராட்சி நிர்வாகம் முறையாக செலவிடவில்லை. ஏழை மக்கள், கட்சித் தொண்டர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் வகையில் எனது பிறந்த நாள் விழாவை வரும் 30-ம் தேதி மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடத்த கட்சித் தொண்டர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்" என்றார் மு.க.அழகிரி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in