நடைபாதை வியாபாரிகளுக்கு வருகிறது வசந்த காலம்

நடைபாதை வியாபாரிகளுக்கு வருகிறது வசந்த காலம்
Updated on
1 min read

நடைபாதை வியாபாரிகள் மசோதாவை குளிர்கால கூட்டத் தொடரிலேயே மாநிலங்களவையில் நிறைவேற்றக் கோரி, தமிழக எம்.பி.க்களிடம் வியாபாரிகள் குழு மனு கொடுத்து வருகின்றனர். இது நிறைவேறினால் தங்களுக்கு தொழில் பாதுகாப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர் நடைபாதை வியாபாரிகள்.

நாடு முழுவதும் நடைபாதை வியாபாரிகள் ஒரு கோடிக்கும் அதிகமானோர் இருக்கின்றனர். இவர்களது தொழில் பாதுகாப்பு தொடர்பான சட்டம் இயற்றுவது குறித்து 3 ஆண்டுகளுக்கும் மேலாக விவாதங்கள் நடந்துவருகின்றன. இந்த நிலையில், நடைபாதை வியாபாரிகள் மசோதா கடந்த செப்டம்பர் 6-ம் தேதி மக்களவையில் நிறைவேறியது. மாநிலங்களவையிலும் நிறை வேறினால்தான் சட்ட வடிவம் பெறும் என்பதால் தற்போது அதற்கான கோரிக்கைகள் எழுப்பப்படுகின்றன.

இந்த மசோதாவை சட்டமாக்கி நடைபாதை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கக் கோரி இளைஞர் காங்கிரசார் தமிழகம் முழுவதும் 110 சட்டமன்ற தொகுதிகளில் தெருமுனைக் கூட்டங்களை நடத்தி முடித்துள்ளனர். மாநிலங்களவையில் மசோ தாவை இந்த குளிர்கால கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றித் தரக்கோரி, தமிழக மாநிலங்களவை எம்.பி.க்களை தனித்தனியே சந்தித்துப் பேசி வருகிறது நடைபாதை வியாபாரிகள் குழு. மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கட்சியின் டி.கே.ரங்கராஜன் உள்ளிட்டவர்களை சந்தித்து மனு கொடுத்திருக்கும் இவர்கள், அடுத்ததாக அதிமுக, திமுக எம்.பி.க்களையும் சந்திக்க இருக்கின்றனர்.

இதற்கான கூட்டு முயற்சிகளை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆடிட்டர் ‘அமெரிக்கை’ நாராயணன் எடுத்து வருகிறார். ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

எந்த விதமான தொழில் பாதுகாப்பும் இல்லாததால் நடைபாதை வியாபாரிகளின் நிலை நித்திய கண்டம் பூரண ஆயுசாக இருக்கிறது. தமிழகத்தில் மட்டும் நடைபாதை வியாபாரிகள் சுமார் 7 லட்சம் பேர் இருக்கின்றனர்.

நடைபாதை வியாபாரி களுக்கு உரிமம் வழங்குவது தொடர்பான கமிட்டியில் 40 சதவீதம் நடைபாதை வியாபாரிகளும் 10 சதவீதம் என்.ஜி.ஓ.க்களும் இருக்க வேண்டும். ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட இடத்திலிருந்து கடைகளை அகற்றும்போது ஒரு மாத காலத்துக்குள் தகுந்த மாற்று இடம் கொடுக்க வேண்டும். நகர்ப் பகுதிகளில் மக்கள்தொகையில் இரண்டரை சதவீதம் அளவில் நடைபாதை வியாபாரிகள் எண்ணிக்கை இருக்க வேண்டும். நடைபாதை வியாபாரிகளை அத்தியாவசிய பொருட்கள் விற்பனையாளராக அங்கீகரிக்க வேண்டும். ஒருவருக்கு வழங்கப்பட்ட நடைபாதை வியாபாரிக்கான உரிமத்தை தனிப்பட்ட நபர்களுக்கோ, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கோ மாற்ற முடியாது. உரிமையாளர் இறந்துவிட்டால் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு உரிமத்தை மாற்றிக் கொள்ளலாம்.

இப்படி பல நல்ல ஷரத்துக்கள் நடைபாதை வியாபாரிகள் மசோதாவில் இருக்கிறது. இது சட்டவடிவமானால் நடைபாதை வியாபாரிகளுக்கு வசந்தகாலம்தான்.

அவர்களுக்கு தொழில் பாதுகாப்பு கிடைக்கும். இந்த மசோதாவை சட்டமாக்க காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக அனைத்துக் கட்சி எம்.பி.க்களை சந்தித்துப் பேசி வருகிறோம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in