

தமிழக இந்து சமய அறநிலையத் துறை பல்வேறு வகையான ஆன்லைன் சேவைகளை வழங்குவதாக அறிவித்தது. ஆனால், முக்கிய கோயில்களின் இணைய தளத்தில் இ-டொனேஷனை தவிர வேறு எதுவும் பயன்பாட்டில் இல்லாததால் பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழக இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் கட்டுப்பாட்டில் சுமார் 38 ஆயிரம் கோயில்கள் உள்ளன. இவற்றில் 4 ஆயிரம் கோயில்கள் முக்கிய ஸ்தலங்களாக உள்ளன. இங்கு தினமும் பல்லா யிரக்கணக்கான பக்தர்கள் வழி படுகின்றனர். பிரபலமான 45 கோயில்கள் தொடர்பான தகவல் களை இணையம் மூலம் தெரிந்து கொள்ளவும், கோயிலின் பல்வேறு சேவைகளை மக்கள் பயன்படுத்திக் கொள்ளவும் வசதியாக இணையதள சேவை (http://www.tnhrce.org/important.html) தொடங்கப்பட்டது.
இந்த இணையதளத்தில் தமிழகத்தின் 45 பிரபலமான கோயில்களின் இணைய முகவரிகள் மற்றும் விவரங்கள் இருக்கும். அந்த கோயில்களுக்கான இணைய இணைப்பை சொடுக்கினால், உடனே சம்பந்தப்பட்ட கோயிலின் முழுவிவரமும் தனிப் பக்கத்தில் தெரியும். அதில் கோயிலின் வரலாறு, நிர்வாகம், சேவைகள் என அடுக்கடுக்கான தகவல்கள் இருக்கும். இந்தப் பக்கத்திலுள்ள இ-பிரிவில் பூஜை செய்வது, காணிக்கை செலுத்துவது, தங்கும் வசதிகளை தேர்வு செய்வது, நிதியுதவி அளிப்பது போன்ற இணைப்புகள் உள்ளன.
இதன்படி பக்தர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இக்கோயில்களில் பூஜைகளைச் செய்ய முன்பதிவு செய்யலாம். மேலும் எங்கிருந்து வேண்டுமானா லும் உண்டியல் தொகை செலுத் தலாம். ஆனால் இந்த இணைய தளத்தில் தற்போது இ-டொனேஷன் எனப்படும் நிதியுதவி அளிக்கும் சேவை மட்டுமே பயன்பாட்டில் உள்ளதாகவும், மற்றவை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக ராமமூர்த்தி என்னும் ஆன்மிக ஆர்வலர் கூறியதாவது:
எனது மகன் டெல்லியில் பணிபுரிந்து வருகிறார். அவர் ராமேசுவரம் கோயிலுக்கு செல்வதற்காக இணையத்திலுள்ள அறநிலையத்துறை இ-சேவைகளில் பூஜைக்கும், தங்குவதற்கும் முன் பதிவுகளை செய்ய முயற்சித்தார். ஆனால் அவை செயல்படவில்லை. இ-டொனேஷன் சேவை மட்டும் செயல்படுகிறது. தொலைதூரத்தில் உள்ள பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இ-சேவைகளில் உள்ள பிரச்சினைகளை விரைவில் தீர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுதொடர்பாக அறநிலையத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “அறநிலையத் துறையில் உள்ள முக்கிய கோயில்களின் இணையதளங்களை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சில தொழில்நுட்ப குறைபாடுகளால் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அந்தந்த கோயில்களின் நிர்வாக அதிகாரிகளிடம் கேட்டுள்ளோம். அந்த அறிக்கைகளை ஆய்வு செய்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.