

சென்னை: தமிழகத்தில் 4 ஆண்டுகளில் 21,397 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பெண்களின் கல்வி, பாதுகாப்பு, பொருளாதாரம், சுகாதாரம் மற்றும் அரசியல் பிரதிநிதித்துவ இடைவெளிகளைக் களைய அக்டோபர் மாதம் முழுவதும் விழிப்புணர்வு இயக்கத்தை வீ த லீடர்ஸ் அமைப்பு தொடங்கி உள்ளது. இந்நிலையில், அமைப்பின் தலைவர் அண்ணாமலை, 128 பக்கங்கள் கொண்ட விரிவான பெண்கள் கொள்கை ஆவணத்தை நேற்று வெளியிட்டார்.
அதில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 2020 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் போக்சோ, பாலியல் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல், பின்தொடர்ந்து தொல்லை கொடுத்தல் மற்றும் ஆட்கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மொத்தம் 26,145 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் போக்சோ வழக்குகள் மட்டுமே 21,397 ஆகும். இக்காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் தீவிரமாக உயர்ந்துள்ளன என்பதையும் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
பெண்கள் மேல்நிலைக் கல்வியை நிறைவு செய்வது, அவர்களின் எதிர்பார்க்கப்படும் வருவாய் ஈட்டும் திறனை 44.8 சதவீதம் வரை உயர்த்தும் என்பதையும், பெண்களின் தொழிலாளர் பங்களிப்பு விகிதத்தை 9.6 சதவீத புள்ளிகள் அதிகரிக்கும் என்பதையும் ஆய்வு நிரூபிக்கிறது.
அரசியல் அதிகாரமளித்தலில், முடிவெடுக்கும் உயர் தளங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் இன்னும் மிகக் குறைவாகவே உள்ளது. இந்தியாவில், மக்களவை இடங்களில் 13.8 சதவீதம் மற்றும் மத்திய அமைச்சரவையில் 5.6 சதவீதம் மட்டுமே பெண்களின் பிரதிநிதித்துவமாக உள்ளது. அதே சமயம் தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டவர்களில் பெண்கள் 11.01 சதவீதம் மட்டுமே ஆவர்.
இந்த அக்டோபர் மாத பிரச்சார இயக்கமானது, பெண்களும், ஆண்களும் ஒரு பொதுவான உயரிய இலக்கை நோக்கி இணைந்து செயல்படும் ஒரு பாதுகாப்பான, ஆரோக்கியமான, பொருளாதார ரீதியாக தற்சார்பு கொண்ட மற்றும் முன்னேற்றத்துக்கான சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.