

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூன்றாம் பட்டியலிலும் இடம் பெறாததால் திருச்சி மக்கள் வருத்தமடைந்துள்ளனர்.
தமிழகத்திலுள்ள சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட 12 மாநகராட்சிகள் உட்பட இந்தியாவில் 100 நகரங் களை ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பல்வேறு கட்டங்களாக நிறைவேற்றப்பட உள்ள இத்திட்டத்துக்குத் தேர்வு செய்யப்படும் நகரங்களில் தலா ரூ.1000 கோடியில் வளர்ச்சி பணி கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இத்திட்டத்தை நிறைவேற்ற உத்தேசிக்கப்பட்ட நகரங்களில் கடந்தாண்டு தனியார் கன்சல்டன்சி நிறுவனங்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது அந்நகரங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக் கப்பட்டது. திருச்சி மாநகரில் ‘ஜோன்ஸ் லாங் லாசெல்லே கன்சல்டன்ட்ஸ்’ நிறுவ னமும், மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து இப்பணியை மேற்கொண்டன.
இந்த திட்ட அறிக்கைகளை ஆய்வு செய்த பின், முதல் கட்டமாக ஸ்மார்ட் சிட்டி திட்டம் நிறைவேற்றப்படும் 20 நகரங்களின் பட்டியலை கடந்த ஜனவரி 28-ம் தேதி மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு வெளியிட்டார். அதில் தமிழகத்திலுள்ள சென்னை, கோவை ஆகிய 2 நகரங்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தன.
அதைத்தொடர்ந்து, 2-ம் கட்டமாக மேலும் 13 நகரங்களின் பட்டியல் கடந்த மே 23-ம் தேதி வெளியிடப்பட்டது. அதிலும் திருச்சி இடம்பெறவில்லை. இந்நிலையில் இத்திட்டத்தின் 3-வது பட்டியல் நேற்று வெளியானது. அதில் தமிழகத்திலுள்ள மதுரை, வேலூர், சேலம், தஞ்சாவூர் உட்பட 27 நகரங்கள் இடம் பெற்றிருந்தன. தொடர்ந்து 3-வது முறையாக ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் இடம் பெறாததால் திருச்சி மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இதுகுறித்து, கே.கே.நகர் இமயம் மக்கள் நல அமைப்பின் நிர்வாகியான எஸ்.செந்தில்குமார் கூறும்போது, “நாட்டின் சுகாதா ரமான நகரங்களின் பட்டியலில் 2-வது இடத்தில் இருந்ததாலும், மருத்துவம், தொழில், கல்வி போன்றவற்றில் சிறந்து விளங்குவதாலும் திருச்சி மாநகரம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் முதல் பட்டியலிலேயே இடம் பெறும் என நம்பினோம். ஆனால், 3-வது பட்டியலில்கூட இடம் பெறாதது வருத்தமளிக்கிறது” என்றார்.
எடமலைப்பட்டிபுதூரைச் சேர்ந்த இயன்முறை மருத்துவர் ஆர்.தமிழ்ச்செல்வி கூறும்போது, “மாநிலத்திலுள்ள 4 பெரிய மாநகராட்சிகளில் சென்னை, கோவை, மதுரை ஆகியவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு தேர்வாகிவிட்ட நிலையில், திருச்சி மட்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. இத்திட்டத் தின் மூலமாவது மாநகரின் அனைத்து பகுதிகளுக்கும் சாலை, பாதாள சாக்கடை, குடிநீர், பொதுப் போக்குவரத்து வசதி முழுமையாகக் கிடைக்கும் என காத்திருந்தோம். அதற்கான வாய்ப்புகளும் தள்ளிப் போய் கொண்டுள்ளது” என்றார்.
திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரி முன்னாள் துணை முதல்வர் டாக்டர் அலீம் கூறும்போது, “2-வது பட்டியலில் தமிழகத்தில் ஒரு நகரம்கூட தேர்வாகாத நிலையில், 3-வது பட்டியலில் 4 நகரங்கள் தேர்வாகியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் நன்றி. மாநிலத்தின் 2-வது தலைநகரமாகக் கருதப்படும் திருச்சி, அடுத்த பட்டியலிலாவது இடம் பெற வேண்டும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.
திட்ட அறிக்கை வலுவில்லையா?
திட்ட கருத்துரு அறிக்கை வலுவாக இல்லாததே ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் திருச்சி இடம் பெறாமல் போவதற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து மாநகராட்சி பொறியாளர் நாகேஷிடம் கேட்டபோது, “மற்ற நகரங்களைவிட, நல்ல முறையிலேயே திட்டக் கருத்துரு அனுப்பியுள்ளோம். அப்படியிருந்தும் கிடைக்காமல் போய்விடுகிறது. நிச்சயம் அடுத்தமுறை வாய்ப்பு கிடைக்கும்” என்றார்.