அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ரத்து: பயணத்தை பாதியில் கைவிட்ட முதல்வர்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ரத்து: பயணத்தை பாதியில் கைவிட்ட முதல்வர்
Updated on
3 min read

அலங்காநல்லூரில் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக ஜல்லிக்கட்டு போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்கும் பயணத்தைப் பாதியில் நிறுத்தி விட்டு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை சென்றார்.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி மதுரை அலங்கா நல்லூரில் 6-வது நாளாக போராட் டம் நீடித்தது. தமிழக அரசு அவசர சட்டம் மூலம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த நேற்று அறிவிப்பு வெளியானது. இதற்கான ஏற்பாடுகளை நேற்று முன்தினம் இரவே அதிகாரிகள் தொடங்கினர். கால்நடைத்துறை உட்பட அரசுத் துறை அதிகாரிகள் அலங்காநல்லூரில் முகாமிட்டனர்.


அலங்காநல்லூர்- பாலமேடு பிரதான சாலையில் கட்டைக்கால்களுடன் காளைகளின் முகமூடிகளை அணிந்து போராட்டக் களத்துக்குச் செல்லும் இளைஞர்கள். | படங்கள்: ஜெ.மனோகரன்

ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் இருக்க ஏற்பாடு செய்தனர். வாடிவாசலில் தேவையான ஏற்பாடுகளும் தொடங்கப்பட்டன. ஆனாலும், ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என போராட்டக்காரர்களும், பொதுமக்களும் கோரிக்கை எழுப்பினர். தற்காலிக தீர்வை ஏற்க அவர்கள் மறுத்தனர். முன்னேற்பாடுகளை அவர்கள் தடுக்க முயன்றனர். இதனால் இரவில் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் நிறுத்தப்பட்டன.

கற்களைப் போட்டு போராட்டம்

காலையில் ஜல்லிக்கட்டு நடத்திவிடலாம் என அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டனர். இதற்கும் வாய்ப்பில்லை. அங்கு தொடர்ந்து எதிர்ப்பு வலுத்தது. வாடிவாசல் பகுதியில் போராட்டக்காரர்கள் திரண்டனர். காலை முதலே பெண்கள் அங்கு முன்பகுதி அமர்ந்து நிரந்தர தீர்வு தேவை என கோஷங்களை எழுப்பினர்.

இந்நிலையில் அலங்காநல்லூ ரில் ஜல்லிக்கட்டு தொடங்கி வைக்க நேற்று முன்தினம் இரவே மதுரையில் வந்து தங்கிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் காலையில் அலங்காநல்லூர் செல்ல முயற்சி எடுக்கப்பட்டது. அங்கு எதிர்ப்பு அதிகரித்து இருக்கும் தகவலும், முதல்வர் செல்லும் வழி உட்பட அனைத்து வழிகளிலும் முள்செடி, கற்களைப் போட்டு தடைகளை ஏற்படுத்தியதும் தெரிவிக்கப்பட்டது. வாடிவாசலை மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் முற்றுகையிட்டு இருப்பது பற்றியும் முதல்வருக்கு தெரிவிக்கப்பட்டது.


அலங்காநல்லூரில் ஒரு வீட்டில் பயிற்சி அளித்து ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக ஆக்ரோஷத்துடன் தயாராகிவரும் காளை.

போலீஸ் அதிகாரிகள், ஆட்சியரை அனுப்பி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்களும் அங்கு செல்ல முடியாத சூழல் உருவானது. அலங்காநல்லூர் நிலவரம் பற்றி முதல்வருக்கு உளவுத்துறை போலீஸாரும், அதிகாரிகளும் தொடர்ந்து தெரிவித்தனர். எக்காரணத்தைக் கொண்டும் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என்பதில் அப்பகுதி மக்களும், போராட்டக்காரர்களும் தீவிரமாக இருந்தனர்.

இதற்கிடையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது அலங்காநல்லூர் பயணத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார். பிற நாட்களைவிட, நேற்று வாடிவாசல் பக்கம் போராட்டம் திரும்பியது. பெண்கள் முன்பகுதி யில் அமர்ந்து கொண்டு ஜல்லிக்கட்டு நிரந்தர தீர்வு தேவை என கோஷம் எழுப்பினர். உள்ளூர் மக்கள் நேற்று அதிகமாக வந்தனர். ஜல்லிக்கட்டை நடத்தவிடக்கூடாது என்பதால் கூட்டத்தை அதிகரித்து காட்ட மதுரை தமுக்கம் பகுதியில் இருந்து மாணவர்கள் வரவழைக் கப்பட்டனர். கேட் கடை பகுதியில் கூடியிருந்த இளைஞர்களும், மாணவர்களும் வாடிவாலில் திரண்டு கோஷங்களை எழுப்பியவாறு இருந்தனர்.

தடுப்புகள் அமைப்பு

அலங்காநல்லூர் மெயின் ரோடு, புதுப்பட்டி 4 பிரதான வழிகளில் கரும்பு லோடு லாரிகளை குறுக்கே நிறுத்தியும், கருவேல மரங்களை வெட்டிப் போட்டும் தடுத்தனர். அலங்காநல்லூரை சுற்றிலும் 15-க்கும் மேற்பட்ட வழிகளில் அந்தந்தப் பகுதி இளைஞர்களே தடுப்புகளை ஏற்படுத்தி, வாகனங்களைத் தடுத்தனர். இரு சக்கர வாகனம் மட்டுமே அனுமதித்தனர். நேற்று காலை 9 மணிக்கு அலங்காநல்லூருக்கு தென்மண்டல ஐ.ஜி. சென்றனர். முக்கிய அதிகாரிகளும் ஊருக்குள் நுழைய முடியவில்லை.


அலங்காநல்லூர் செல்லும் வழியில் வலசை சந்திப்பில் கருவேல மரங்களை சாலையில் போட்டு தடுப்புகள் அமைத்து போராடும் கிராமத்து பெண்கள். | படம்: ஜி.ஞானவேல்முருகன்


ஜல்லிக்கட்டு மீதான தடையை விலக்கக் கோரியும், பீட்டாவை தடை செய்ய வலியுறுத்தியும் அலங்காநல்லூர் அருகே அ.புதுப்பட்டி கிராமத்தில் வண்டி, உழவுக் கருவி மற்றும் செடிகளைப் போட்டு ஏற்படுத்தப்பட்ட தடுப்புகள். | படம்: ஜி.ஞானவேல்முருகன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in