

வண்டலூரில் ரூ.55 கோடியில் 6 வழிப்பாதைகள் கொண்ட உயர் நிலை மேம்பாலத்துக்கான தூண் அமைக்கும் பணிகள் தொடங்கின.
வண்டலூரில் தேசிய நெடுஞ் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக வண் டலூர் சந்திப்பில் 6 வழிப்பாதைகள் கொண்ட உயர்நிலை மேம்பாலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதற்காக ரூ.55 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. மேம்பாலம் அமைப்பதற்கான மண்பரிசோதனையும் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் மேம்பாலத் துக்காக கான்கிரீட் தூண் அமைக்கும் பணி கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கியது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
வண்டலூர் - கேளம்பாக்கம் சந்திப்பில் ரூ.55 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. மேம்பாலம் 6 வழிகளைக் கொண்டதாக அமைக்கப் படும். மேம்பாலத்தின் நீளம் 700 மீட்டர், அகலம் 24 மீட்டர் மற்றும் தற்போதைய சாலையின் நடுவே 9 தூண்கள் அமைக்கப்படும். தற்போது 5 தூண்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மேம்பாலம் 2018-ல் பயன்பாட்டுக்கு வரும் வகையில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. போக்குவரத்து நெரிசலுக்கு முதலில் தீர்வு காணும் வகையில், வண்டலூர் சந்திப்பு முதல் ஊரப்பாக்கம் வரை சாலை அகலப்படுத்தப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு பணிகள் நடைபெறுகிறது.