

இளம் இசைக்கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக வருடத்தின் மத்தியில் 3 நாட்களுக்கு இசைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன என்று மியூசிக் அகாடமியின் தலைவர் என்.முரளி கூறினார்.
இசைக்கலைஞர் சுகந்தா ராமனின் நினைவாக மியூசிக் அகாடமியில் 3 நாள் இசை நிகழ்ச்சி சென்னையில் நேற்று தொடங்கியது. இந்நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் மியூசிக் அகாடமியின் தலைவர் என்.முரளி, செயலாளர் வி.ஸ்ரீகாந்த், ரேடில் இசை வாத்தியங்கள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜி.ராஜ் நாராயணன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் மியூசிக் அகாடமியின் தலைவர் என்.முரளி பேசியதாவது:
மார்கழி மாத இசைக் கச்சேரிகளில் பங்கேற்க முடியாதவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் வருடத்தின் மத்தியில் தற்போது ‘தி மியூசிக் அகாடமி - ரேடில் மிட் இயர் ஆஃப் கிளாசிக்கல் கர்நாடிக் கான்சர்ட்ஸ்' என்னும் இந்த இசைக்கச்சேரி நடத்தப்படுகிறது. இது இளைஞர்களுக்கு மிக பெரிய வாய்ப்பாகும்.
இந்த புதிய அம்சத்தை ரேடில் எலக்ட்ரானிக்ஸின் முயற்சியோடு மியூசிக் அகாடமி முன்னெடுத்துள்ளது. இதற்கு ரேடில் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜ் நாராயணன்தான் காரணம் ஆவார். அவருக்கு எனது பாராட்டுக்களையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாரம்பரிய இசைக்கருவிகளை மின்னணு முறையில் மாற்றியமைத்த பெருமை ராஜ் நாராயணனைச் சேரும்.
மின்னணு இசைக்கருவிகளை அவரது நிறுவனம் டிஜிட்டல் இசைக்கருவிகளாக மாற்றியுள்ளதால் பல இசைக்கலைஞர்கள் பயணத்தின் போதும் இசைக்கருவிகளை கையாள முடிகிறது.
6 குழுவினர் பங்கேற்பு
இந்த இசைக்கச்சேரி ராஜ் நாராயணனின் தாயார் சுகந்தா ராமனின் நினைவையொட்டி நடத்தப்படுகிறது. 1930-களில் பெண்கள் மேடை ஏறுவது சாதாரண விஷயமல்ல. அப்போதிருந்த தடைகளை மீறி கர்நாடக சங்கீதம், இந்துஸ்தானி, வீணை என இசையின் பல பரிமாணங்களிலும் சாதித்தவர் சுகந்தா ராமன். அவரது நினைவையொட்டி நடத்தப்படும் இந்த கச்சேரிகளில் 6 குழுவினர் பங்கேற்கின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் ராஜ் நாராயணன் பேசும்போது, “எனது தாயார் சுகந்தா ராமன் இசை மீது மிகுந்த பிரியம் கொண்டவர். கர்ப்பிணியாக இருக்கும்போதுகூட தினமும் 3 மணி நேரம் வரை பாடுவார். பாரம்பரிய இசைக்கருவிகளை நான் மின்னணு முறையிலும் டிஜிட்டல் முறையிலும் வடிவமைத்தபோது அவற்றில் பெரும்பாலானவைக்கு என் தாயார்தான் பெயர் சூட்டுவார்.
சாதிக்க வேண்டும்
இளைஞர்கள், ஏழை எளியவர்கள் இசைத்துறையில் சாதிக்க வேண்டும் என்று விரும்பிய எனது தாயாரின் எண்ணம் இந்த 3 நாள் இசை நிகழ்ச்சிகள் மூலம் சாத்தியமாகியுள்ளது' என்றார்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ உஷா மற்றும் ஸ்ரீஷா கார்த்திகா வைத்தியநாதன், வம்சி கிருஷ்ணா, ஸ்ரீவித்யா, சுதா ஐயர் ஆகிய இசைக்கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.