

அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அரசே நேரடியாக செயல்படுத்த உத்தரவிடக் கோரிய மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ஆர்.விமலா உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம் அமலில் உள்ளது. இந்தத் திட்டத்தை பொதுத்துறை காப்பீட்டு நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகள் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்பது விதி ஆகும். ஆனால் இந்த விதியை தனியார் மருத்துவமனைகள் பின்பற்றுவதில்லை.
ஆசிரியராக பணிபுரியும் என் கணவர் இத்திட்டத்தில் உறுப்பினராக உள்ளார். என் மகன் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது, அவருக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனை பணம் வசூலித்தது. சிகிச்சை செலவு தொகை ரூ.1.57 லட்சத்தை திரும்பக் கேட்டபோது, பொதுத்துறை நிறுவனம் ரூ.7 ஆயிரம் மட்டுமே தந்தது.
ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், மேற்கு வங்க மாநிலங்களில் அரசு ஊழியர்கள் காப்பீட்டு திட்டத்தை அரசே நேரடியாக செயல்படுத்துகிறது. தமிழகத்தில் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இதனால் அரசு ஊழியர்களுக்கு பலன் கிடைப்பதில்லை.
தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைகிறது. ஜூன் 30-க்குப் பிறகு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த பொதுத்துறை நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான அரசா ணையை ஜூன் 9-ல் அரசு பிறப்பித்துள்ளது. இந்த அரசா ணையை ரத்து செய்ய வேண்டும்.
மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அரசு நேரடியாக செயல்படுத் தினால் அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பயனடைவார்கள். எனவே அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தமிழக அரசு நேரடியாக செயல்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் நூட்டி ராமமோகனராவ், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் லஜபதிராய் வாதிட்டார். விசாரணைக்குப்பின் மனுவுக்கு 8 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் தலைமைச் செயலர், நிதித் துறை முதன்மைச் செயலர், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.