

சர்வதேச சிலைக்கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரின் கூட்டாளி தீனதயாள் மூலமாக சென்னையிலிருந்து அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த அமராவதி சுண்ணாம்புக் கல் சிற்பம் ஒன்று அபுதாபியில் இருப்பது தெரியவந்துள்ளது.
விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலின் பிரித்தியங்கரா, மற்றும் அர்த்தநாரீஸ்வரர் கற்சிலைகள் ஆஸ்திரேலியாவில் உள்ள ’நேஷனல் கேலரி ஆஃப் ஆஸ்திரேலியா’வுக்கு சுபாஷ் கபூரால் கடத்தப்பட்டதை நாம் முன்பே எழுதி இருந்தோம். இந்நிலையில், அர்த்தநாரீஸ்வரரும், பிரத்தியங்கராவும் அடுத்தடுத்து மீட்கப்பட்டு தமிழகம் கொண்டுவரப்பட்டுவிட்டன.
இந்நிலையில் சுபாஷ் கபூரின் கூட்டாளி தீனதயாள் மூலமாக ஆந்திர மாநில தலைநகர் அமராவதி பகுதியைச் சேர்ந்த சுண்ணாம்புக் கல் சிற்பம் ஒன்று அமெரிக்காவுக்குக் கடத்தப்பட்டதும், அது கபூர் மூலமாக பிரான்ஸில் உள்ள உலக புகழ்பெற்ற லூவர் அருங்காட்சியகத்துக்கு விற்கப்பட்டதும் தற்போது தெரியவந்துள்ளது.
லூவர் அருங்காட்சியகம் விரைவில் அபுதாபியில் தனது கிளையை தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் லூவரின் அபுதாபி கிளைக்காக அமராவதி சிற்பம் விலைக்கு வாங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ’தி இந்து’விடம் ‘தி இந்தியா ப்ரைடு புராஜெக்ட்’ அமைப்பின் எஸ்.விஜய்குமார் கூறியதாவது:
பிரத்யங்கரா சிலை இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டபோது மதுராவுக்குச் சொந்தமான புத்தர் சிற்பம், அமராவதியைச் சேர்ந்த, புத்தரின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் சுண்ணாம்புக் கல் புடைப்புச் சிற்பம் ஆகியவையும் ஒப்படைக்கப்பட்டன. கடந்த ஆண்டு சென்னையில் கபூரின் கூட்டாளி தீனதயாள் கைது செய்யப்பட்டபோது அவரிடமிருந்து ஆந்திர தலைநகர் அமராவதியைச் சேர்ந்த மூன்று சுண்ணாம்புக் கல் சிற்பங்களும் கைப்பற்றப்பட்டன. இதனடிப்படையில் தீனதயாளிடம் விசாரித்தபோதுதான் அவர் அமராவதி சிற்பங்களையும் மும்பையிலுள்ள ‘இந்தோ - நேபாள் ஆர்ட் சென்டர்’ வழியாக கபூருக்கு கடத்தியது தெரிய வந்தது.
- சுபாஷ் கபூர்
இதனடிப்படையில் தற்போது, புத்தரின் வாழ்க்கையை சித்தரிக்கும் சுண்ணாம்புக் கல் சிற்பம் ஒன்று ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பி வந்துவிட்டது. கபூரால் சிங்கப்பூர் அருங்காட்சியகத்துக்கு 1997-ல் ரூ. 13.5 லட்சத்துக்கு விற்கப்பட்ட இன்னொரு அமராவதி சிற்பம் அங்கேயே இருக்கிறது. இன்னொரு சிற்பம் அபுதாபி லூவர் அருங்காட்சியகத்திடம் இருப்பது தெரியவந்துள்ளது. இந்தத் தகவலை லூவர் அருங்காட்சியகம் இதுவரை வெளியிடவில்லை. ஆனால், அமெரிக்க சுங்க இலாகா அதிகாரிகள் இதை உறுதிப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து உரிய முறையில் விசாரணை நடத்தினால் மேலும் பல தகவல்கள் வெளியாகலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.