

கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை மற்றும் வன்கொடுமைச் சம்பவங்களின் எண்ணிக்கை 24,923. இதில், தலித் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் மற்றும் தாக்குதல்கள் மட்டும் 1576. இதில், மத்தியப் பிரதேசத்தில் 376 சம்பவங்களும் உத்தரப் பிரதேசத்தில் 285 சம்பவங்களும் நடந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் நடந்தது 34 சம்பவங்கள் என்ற சற்று ஆறுதலான தகவலையும் தருகிறது இதற்கான ஆய்வுகளை மேற்கொண்ட எவிடென்ஸ் அமைப்பின் புள்ளிவிவரம்.
‘‘கடந்த ஆண்டு ஜனவரியிலிருந்து இந்த ஜூலை வரை தமிழகம் முழுவதும் தலித் பெண்கள் தாக்கப்பட்ட சம்பவங்களில் 124-ஐ மட்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டோம். இந்த வழக்குகள் முறையாக பதிவு செய்யப்பட்டிருந்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நியாயம் கிடைக்கவில்லை என்பதுதான் எங்களது கள ஆய்வில் கிடைத்த உண்மை’’ என்கிறார் எவி டென்ஸ் திட்ட இயக்குநர் திலகம்.
‘இந்த 124 வழக்குகளில் 75 பேர் சாதி ரீதியாக இழிவுபடுத்தப்பட்ட தாகவும் 35 பேர் பாலியல் ரீதியாக ஆபாசமாக திட்டப்பட்டதாகவும் 45 பேர் தாக்குதலுக்கு உள்ளானதாக வும் புகார் கொடுத்திருக்கிறார்கள். 36 பேர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும் 18 பேர் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாகவும் 8 பேர் பாலியல் வன்கொடுமைக்கு முயற்சி நடந்ததாகவும் புகார் கொடுத்திருக்கிறார்கள். 16 வழக்கு கள் கொலை வழக்குகள்’ என்கிறது எவிடென்ஸ் புள்ளிவிவரம்.
‘‘இந்த 124 வழக்குகளில் 74ல் மட்டுமே குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 40 பெண்களுக்கு மட்டுமே அரசின் நிவாரணத் தொகை கிடைத்திருக்கி றது. பொள்ளாச்சியில் பதிவான ஒரே ஒரு வழக்கில் மட்டுமே குற்ற வாளிக்கு ஓராண்டு தண்டனை கிடைத்தி ருக்கிறது. அதுவும் அப்பீலுக்கு போய், குற்றவாளி வெளியில் இருக்கிறார். 11 வழக்குகள் தள்ளுபடி ஆகிவிட்டன. எஞ்சிய வழக்குகள் விசாரணையில் இருக்கிறது.
கடந்த காலங்களில் ‘முறையாக புகார் கொடுக்கவில்லை’ என்று சொல்லி கடமையை தட்டிக் கழித்த போலீஸ், இந்த 124 வழக்குகளிலும் முதல்வர் வரை புகார்கள் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான் எங்களது குற்றச்சாட்டு. கிட்டத்தட்ட 25 நாட்கள் 20 பேர் கொண்ட குழுவை வைத்து, 25 மாவட்டங்களில் நாங்கள் மேற்கொண்ட கள ஆய்வில் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தி ருக்கிறது’’ என்று சொல்லும் திலகம்,
‘‘தலித் மற்றும் பழங்குடியினர் சம்பந்தப்பட்ட வழக்குகளை டி.எஸ்.பி.தான் விசாரிக்கணும். ஆனால், இவற்றில் 95 சதவீத வழக்குகளை டி.எஸ்.பி.க்கள் விசாரிக்கவே இல்லை. 70 சதவீத வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களை யாருமே விசாரிக்கவில்லை. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 36 பெண்களையும்கூட சட்ட சம்பிரதாயத்துக்காகவே விசாரிச்சிருக்காங்க. இதனால், சம்பவம் நடந்து ஏழு நாட்கள் கழிச்சுத்தான் அவர்களில் பலர் மருத்துவ பரிசோதனைக்கே உட்படுத்தப்பட்டிருக்காங்க. இதெல்லாமே குற்றவாளிகளை தப்பிக்கவைக்க விசாரணை அதிகாரிகள் செய்த சதி.
நீதித்துறை, காவல் துறை, நிர்வாகத் துறை, மருத்துவத் துறை இந்த நான்கு துறைகளும் ஒருங்கி ணைப்பில்லாமல் கிடப்பதால், ஒரு துறையின் செயல்பாடு மற்றவர்களுக்கு தெரியாமல் போய்விடுகிறது. இதனாலேயே அனைத்து குளறுபடி களும் நடக்கிறது. அதனால்தான் இந்த நான்கு துறைகளையும் இணைத்து ‘கிரிமினல் ஜஸ்டிஸ் கமிஷன்’ அமைக்கணும்னு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
இந்த 124 வழக்குகள் சம்பந்தப்பட்ட புகார் நகல்கள், குற்றப்பத்திரிகை நகல்கள், மருத்துவ சான்றுகள், கோர்ட் ஆவணங்கள் என மொத்தம் 6500 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தயார்செய்து தமிழக அரசின் தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், டி.ஜி.பி., தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணையங்களுக்கு அறிக்கை அனுப்பி இருக்கிறோம். இனியும் நடவடிக்கை இல்லை என்றால் நீதிமன்றத்துக்கு செல்வதைத் தவிர வேறு வழியில்லை’’ என்கிறார்.