

மதுரை மத்திய தொகுதியில் சீல் வைக்கப்பட்ட சமுதாயக் கூடத்தில் இருந்த பிளாஸ்டிக் சேர்கள்.
மதுரை: மதுரை மத்திய தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளர்கள் சமுதாயக் கூடத்தில் பிளாஸ்டிக் சேர்களை பதுக்கி வைத்து வாக்காளர்களுக்கு விநியோகிப்பதாக வந்த புகாரையடுத்து பறக்கும் படையினர் 210 பிளாஸ்டிக் சேர்களை பறிமுதல் செய்தனர்.
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் 3 மாதங்களுக்கு முன்பிருந்தே திமுக அமைச்சர்கள், எல்எல்ஏக்கள் ஆகியோர் சில்வர் குடம், டிபன் பாக்ஸ், ஹாட் பாக்ஸ், சேலைகள் உள்ளிட்ட பொருட்களை வாக்காளர்களுக்கு வழங்கியதாக கூறப்படுகிறது மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமான பழனிவேல் தியாகராஜன், இதுவரை எந்தவிதமான பரிசுப் பொருட்களோ, பணமோ வழங்கியதில்லை.
ஆனால், வழக்கத்துக்கு மாறாக தற்போது தேர்தல் தேதி அறிவிப்புக்கு சில நாட்களுக்கு முன்பு தொகுதி மக்களை சந்தித்த பழனிவேல் தியாகராஜன் பிளாஸ்டிக் சேர்கள் வழங்கினார். அதற்குப் பின்னர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று மதுரை மத்திய தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கா.அப்துல் ஹக்கீம், மத்திய தொகுதிக்குட்பட்ட வடக்கு பெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள சமுதாயக் கூடத்தில் திமுகவினர் சேர்களை பதுக்கி வைத்து வாக்காளர்களுக்கு விநியோகிப்பதாக தேர்தல் ஆணையத்தை இலவச புகார் எண் (டோல் ஃபிரீ நம்பர்) மூலம் தெரிவித்தார்.
இதற்கு தேர்தல் பறக்கும் படையினர் சம்பந்தப்பட்ட சமுதாயக்கூடம் பூட்டி சீல் வைக்கப் பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். அதற்கு நாம் தமிழர் கட்சியினர், திமுகவினரே சீல் வைத்து தேவைப்படும்போது திறந்து சேர்களை வழங்கி வருவதாகத் தெரிவித்தனர்.
அதற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து, சேர்களை பறிமுதல் செய்யாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்ததால், பறக்கும் படையினர், மாநகராட்சி துணை ஆணையர், போலீஸார் வந்து சீலை உடைத்து திறந்து பார்த்தனர்.
அப்போது அங்கிருந்த 210 சேர்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து நாம் தமிழர் கட்சியினர் கூறுகையில், திமுகவினர் சீல் வைத்த துணியில் உதயநிதி படம் உள்ளது. பறக்கும் படையினரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றனர் என்றனர்.