2016 - 2017 நிதியாண்டில் தமிழகத்தில் வணிக வரி வசூல் ரூ.3667 கோடி: அமைச்சர் கே.சி.வீரமணி தகவல்

2016 - 2017 நிதியாண்டில் தமிழகத்தில் வணிக வரி வசூல் ரூ.3667 கோடி: அமைச்சர் கே.சி.வீரமணி தகவல்

Published on

தமிழகத்தில் 2016 17-ம் நிதியாண்டில் ரூ.3667.34 கோடி வணிக வரி வசூலிக்கப் பட்டுள்ளது. கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடும்போது 15 சதவீத வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது என்று வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.

கோவை வணிகவரி அலுவலகத்தில் மண்டல அளவிலான வணிகவரித் துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில், அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:

தமிழகத்தில் வணிகவரித் துறை மூலமாக 2016-2017-ம் நிதியாண்டில், 2017 ஜனவரி வரை ரூ.3667.34 கோடி வரி வசூலிக்கப்பட்டுள்ளது. 2015-16ம் நிதியாண்டில் வசூலான வரியுடன் ஒப்பிடும்போது இது ரூ.478.26 கோடி கூடுதல் வருவாய், அதாவது 15 சதவீத வளர்ச்சி விகிதம் எட்டப்பட்டுள்ளது.

2016-17-ம் நிதியாண்டில் நமூனாக்களை கூர்ந்தாய்வு செய்தல் மூலமாகவும், செயலாக்கப் பிரிவில் பெறப்பட்ட கருத்துருக்களை செயல்படுத்துதல், பழைய வரி நிலுவைகளை வசூல் செய்தல் மூலமாகவும் வணிகவரித் துறையினர் வரி வருவாயைப் பெருக்க வேண்டும். 87 சதவீத வணிகர்கள், நமூனாக்களை இணையம் மூலமாக தாக்கல் செய்துள்ளனர். மொத்த வரி வருவாயில் 95 சதவீதத்துக்கும் மேல் இணையம் மூலமாக பெறப்பப் பட்டுள்ளது.

போலி வணிகம் செய்பவர்கள், தவறான உள்ளீட்டு வரிவரவு பெற்றவர்கள் மீது வணிகவரித் துறையின் வரிவிதிப்பு, செயலாக்கம் ஆகிய பிரிவுகள் மூலமாக கடும் நடவடிக்கை எடுத்து வரி வருவாயை அதிகப்படுத்த வேண்டும். எதிர்மறை, குறைவான வளர்ச்சி காணப்படும் வணிக இனங்களை ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நிலுவையிலுள்ள வரி வருவாயை வசூலிக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில், வணிகவரித் துறை இணை ஆணையர்கள் ரஷ்மிசித்தார்த் ஜகடே, அனிஷ்சேகர், கூடுதல் ஆணையர்கள் ரத்தினசாமி, கர்வர்ஆலம் மற்றும் வணிகவரித்துறை துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in