

தமிழக தலைமை செயலர் ராமமோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ள நிலையில், தமிழக தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறைக்கு வருமான வரித்துறையினர் சென்றுள்ளனர்.
தலைமைச் செயலகத்திலும் பாதுகாப்பு பணியில் மத்திய ரிசர்வ் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தலைமைச் செயலகத்தில் இரண்டாவது தளத்தில் உள்ள தலைமைச் செயலர் அலுவல் அறைக்கு வருமான வரித் துறை அதிகாரிகள் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக தலைமைச் செயலர் வருமான வரி சோதனைக்கு உட்பட்டுள்ளது இதுவே முதன்முறை என்ற சூழலில் தமிழக தலைமைச் செயலகத்துக்கு வருமான வரித்துறையினர் சென்றுள்ளதும் இதுவே முதன்முறையாகும்.
முந்தைய செய்தி:
முன்னதாக, சென்னை அண்ணாநகரில் உள்ள தமிழக தலைமைச் செயலர் ராமமோகன ராவ் வீட்டுக்கு காலை 6 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தனர். அவரது இல்லத்தில் சோதனை தொடங்கியது. அவரது மகனின் அலுவலகம் உள்ளிட்ட 13 இடங்களிலும் ஒரே நேரத்தில் சோதனை தொடங்கியது. போலீஸார் குவிக்கப்பட்டனர்.
செய்தி சேகரிக்க பத்திரிகையாளர்களும் குவிந்தனர். இந்நிலையில், பகல் 12 மணியளவில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் தலைமைச் செயலர் வீட்டுக்கு வந்தனர். 15 பேர் கொண்ட குழு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டது. இதனால், பரபரப்பு கூடியது.
தமிழக தலைமைச் செயலர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை தமிழகத்துக்கே தலைகுனிவு என எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் விமர்சித்தார். அவரைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் கருத்துகளை பகிர மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மட்டும் கண்டனம் தெரிவித்தார்.
இதற்கிடையில், தமிழக தலைமைச் செயலாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில் எவ்வித உள்நோக்கமும் இல்லை என மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.