

நீதிமன்றத் தடை உத்தரவை மீறி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு ஊதிய நிலுவைத் தொகை ரகசியமாக வழங்கப்பட்டு வருவதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதையடுத்து, போராட்டத்தை தீவிரப்படுத்த ஊழியர் சங்கம் முடிவு செய்துள்ளது.
கடந்த 2009-ல், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது. அதன்படி, வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் பிரிவு 11(1)-க்கு உட்பட்ட 14 வங்கிகளின் ஊழியர்களுக்கு 14 சதவீதமும், இதற்கு உட்படாத சொந்த நிதியைக் காட்டிலும் குவிப்பு நட்டம் அதிகம் இருந்த ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை, திண்டுக்கல், மதுரை, நீலகிரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட வங்கிகளின் ஊழியர்களுக்கு 7 சதவீதமும் ஊதிய உயர்வு அமலுக்கு வந்தது. இந்த 9 வங்கிகளும் எந்தத் தேதியில் குவிப்பு நட்டத்தை ஈடுகட்டி, பிரிவு 11(1)-க்குள் வருகின்றதோ அன்று முதல் அவற்றின் ஊழியர்களுக்கும் 14 சதவீத ஊதிய உயர்வு அமலாகும் என்று முத்தரப்பு ஒப்பந்தம் 12(3) கையெழுத்தானது.
இதன்படி, கடந்த 2010 ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து இந்த ஒன்பது வங்கிகளும் நட்டத்தை ஈடுகட்டி, பிரிவு 11(1)-க்குள் வந்துவிட்டன. ஆனாலும், ஒப்பந்தப்படி கூடுதல் ஊதிய உயர்வு வழங்கவில்லை. இந்நிலையில் திண்டுக்கல், தூத்துக்குடி, தஞ்சை மாவட்ட வங்கிகளின் ஊழியர்களுக்கு மட்டும் இந்த ஊதிய உயர்வை கடந்த ஆண்டில் அமல்படுத்தினர்.
இந்த ஆண்டு ஜூனில் புதிய ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது. ஆண்டுக்கு 1700 கோடிக்கு வர்த்தகம் செய்யும் வங்கிகளின் ஊழியர்களுக்கு 20 சதவீதமும் அதற்கு குறைவான வங்கிகளின் ஊழியர்களுக்கு 14 சதவீதமும் குவிப்பு நட்டத்தில் இயங்கும் வங்கிகளின் ஊழியர்களுக்கு 7 சதவீதமும் ஊதிய உயர்வாக அறிவிக்கப்பட்டது.
இதனால் தஞ்சை, சிவகங்கை நெல்லை, நீலகிரி மாவட்ட வங்கிகளின் ஊழியர்கள் 7 சதவீத ஊதிய உயர்வுக்குள் வந்தனர். ஆனால், ஏற்கெனவே போடப்பட்ட ஒப்பந்தப்படி, குவிப்பு நட்டத்தை ஈடுசெய்த காலமான 2010 ஏப்ரலில் இருந்து தங்களுக்கு வழங்க வேண்டிய 7 சதவீத ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், தற்போது 14 சதவீத ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என 4 வங்கிகளின் ஊழியர்கள் போர்க்கொடி தூக்கினர்.
சிவகங்கை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் நான்கு கட்டப் போராட்டத்தை அறிவித்து, அதில் இரண்டு கட்ட போராட்டங்களை நடத்திவிட்டனர். இந்நிலையில், வங்கி ஊழியர் சங்கத்தினரை அழைத்துப் பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, ’கூட்டுறவுப் பதிவாளருடன் கலந்து பேசி நல்லமுடிவு எடுப்போம்’ என்று கூறியுள்ளார். இதையடுத்து, ஊழியர்கள் போராட்டத்தை ஒத்திவைத்திருந்தனர். தற்போது 7 சதவீத ஊதிய உயர்வுக்கான தொகையை சத்தமில்லாமல் வழங்கி வருகிறது வங்கி நிர்வாகம்.
இதுகுறித்து ‘தி இந்து’வுக்கு பேட்டியளித்த சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.எம்.கணேசன், ‘‘பதிவாளரிடம் பேசி முடிவெடுக்கலாம் என்று சொல்லிவிட்டு, கடந்த வாரத்தில் எங்கள் வங்கி ஊழியர்களிடம் வெற்றுத்தாளில் மிரட்டி கையெழுத்து வாங்கியுள்ளனர். வங்கி நிர்வாகத்துக்கும் ஊழியர்களுக்கும் இடையில் தனிப்பட்ட முறையில் ஒப்பந்தம் (18-1) கையெழுத்தானதாக கணக்குக் காட்டத்தான் இப்படிச் செய்தனர். இது தெரிந்ததுமே இந்த ஒப்பந்தம் போடக்கூடாது என கோர்ட்டில் தடை உத்தரவு வாங்கி விட்டோம்.
ஆனால், அதையும் மீறி 18-1 ஒப்பந்தம் போடப்பட்டு, புதன் கிழமையில் இருந்து அவசர அவசரமாய் பணப்பட்டுவாடா நடந்து கொண்டிருக்கிறது. இதை எதிர்த்து நாங்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவோம். ஒத்திவைக்கப்பட்ட போராட்டங்களையும் முழுவீச்சில் நடத்துவோம்’’ என்றார்.