Published : 06 Jan 2014 04:01 PM
Last Updated : 06 Jan 2014 04:01 PM

விஜயகாந்த் சேர்ந்தால் கூட்டணி எப்படி உருப்படும்?- மு.க.அழகிரி ஆவேசம்

கட்சியில் தான் புறக்கணிக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, நாடாளுமன்றத் தேர்தலில் விஜயகாந்துடன் இணைந்தால் திமுக கூட்டணி உருப்படாது என்று கருத்து தெரிவித்துள்ளார்.

'புதிய தலைமுறை' சேனலுக்கு முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக தென்மண்டல அமைப்புச் செயலாளருமான மு.க.அழகிரி அளித்த பேட்டியில் இருந்து...

அமைதியான அரசியல்

"நான் அதிரடி அரசியல் செய்வோரும் உண்டு. அமைதியான அரசியலில் ஈடுபடுவோரும் உண்டு. நான் இப்போது அமைதியான அரசியலில் இறங்கியிருக்கிறேன். அது போகப் போக புரியும். பார்ப்பீர்கள். இந்த அமைதியான அரசியலும் லாபம் இருக்கும்."

காங்கிரஸ் உடனான கூட்டணி

காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகுவதற்கான காரணங்களை, திமுக தலைவர், கட்சியின் பொதுக் குழுவில் கூறியிருக்கிறார். 2009-லேயே இந்த முடிவை எடுத்திருந்தால், சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவியிருக்க முடியாது என்றெல்லாம் சொல்ல முடியாது. அரசியலில் வெற்றி - தோல்விகள் சகஜம். மக்கள் எங்களுக்கு ஓட்டுப்போடாமல் ஏமாற்றியதுதான் தோல்விக்குக் காரணம்.

'எனக்கே தெரியாது'

மத்திய அமைச்சரவையில் இருந்து திமுக விலகியதே அப்போது எங்களுக்குத் தெரியாது. நான் அந்த நேரத்தில் பாராளுமன்றத்தில் இருந்தேன். காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக விலகுகிறது என்ற விஷயமே அப்போது எனக்குத் தெரியாது. பிறகு, அந்தச் செய்தியை உறுதிபடுத்திக்கொண்டுதான், எனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தேன். மத்திய அமைச்சராக நான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறேன். எனக்குத் தெரியாமல், என்னைக் கலந்து ஆலோசிக்காமல் கூட்டணியில் இருந்து விலகும் முடிவு எடுக்கப்பட்டது. மறுநாள், செய்தித்தாள் படித்த பிறகுதான் எனக்கு விஷயமே தெரிந்தது.

திமுக தென் மண்டல அமைப்புச் செயலாளரான எனக்குத் தெரியாமல் பல காரியங்கள் நடக்கிறது. இப்போதும் அப்படி நடந்துகொண்டிருக்கிறது.

எனக்கு ஒருபோதும் பதவி ஆசை இல்லை. அதை அடிக்கடி சொல்லி வந்திருக்கிறேன். மதுரை மத்தி, மதுரை மேற்கு மற்றும் திருமங்கலம் ஆகிய இடைத்தேர்தலில் நாங்கள் தேடித்தந்த வெற்றியின் பரிசாகவே தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியை அன்புக் கட்டளையுடன் கொடுத்தார்கள். அதை ஏற்று, கட்சியை வளர்த்தேன். நாடாளுமன்றத் தேர்தலில் தென் மண்டலத்தில் 10 தொகுதிகளில் 9-ல் வெற்றி பெறச் செய்தோம். கடுமையான உழைப்புக்கு இதெல்லாம் எடுத்துக்காட்டு.

அதைத் தொடர்ந்து, எனது வளர்ச்சி சிலருக்குப் பிடிக்காமல் போனது. எனக்குப் பதவி இருக்கிறது; இன்னொருவருக்குப் பதவி இல்லை என்ற காரணத்தினால்தான் என் பதவியே போனதாக நினைக்கிறேன். ஆனால், யாரையும் நான் குறிப்பிட விரும்பவில்லை.

திமுக தலைமையிடம் பதில் இல்லை

தென் மண்டலத்தில் எனக்குத் தெரியாமல் பல நடவடிக்கைகள் நடப்பதை, கட்சித் தலைமையிடத்திலும் கூறியிருக்கிறேன். எனக்கு ஏன் இந்தப் பதவி கொடுத்தீர்கள்? எனக்கு அதற்குரிய மரியாதை வேண்டுமே? என்றெல்லாம் கேட்டேன். ஆனால், அதற்கு எந்த வித பதிலும் இல்லை.

திமுகவை தலைவர்தான் (கருணாநிதி) தனக்கு ஒரே தலைவர் என்று கூறி, டி.ராஜேந்தர் கட்சியில் இணைந்திருக்கிறார். அவரது தைரியத்தைப் பாராட்டுகிறேன். அதுதான் என்னுடைய நிலைப்பாடும். என்னைப் பொறுத்தவரையில், தலைவரைத் (கருணாநிதி) தவிர தவிர வேறு யாரையும் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது.

'தேமுதிக சேர்ந்தால் கூட்டணி உருப்படாது'

தேமுதிக தலைவர் விஜயகாந்தை ஒரு அரசியல்வாதியாகவே நான் மதிக்கவில்லை. அவரிடம் அரசியல் நாகரிகமே இல்லை. என்னுடைய தலைமையின் கீழ் இருந்தால், கூட்டணியில் இருப்பேன் என்று கூறுகிறார். அப்படிப்பட்டவரை திமுக கூட்டணியில் எப்படி சேர்ப்பது? டெல்லியில் 11 இடங்களில் போட்டியிட்டு வெறும் 2,000 ஓட்டுகள் வாங்கி இருக்கிறார். அவருடன் சேர்ந்தால் கூட்டணி எப்படி உருப்படும்?

திமுகவில் தற்போது உள்ள விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லீம் லீக், புதிய தமிழகம் ஆகிய கூட்டணி கட்சிகளின் ஆதரவே நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு போதும். பல மாவட்டங்களில் திமுக இரண்டாகப் பிரிந்திருக்கிறது. அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டாலே போதும்.

மதுரையில் மீண்டும் நான் போட்டியிடுவது குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது.

சமீபத்தில் நடந்த திமுக பொதுக்குழுவில் நான் பங்கேற்கவில்லை. அதற்கு குறிப்பிடத்தக்க காரணம் எதுவும் இல்லை. என்னைக் கேட்டு திமுகவில் எதுவும் செய்வதில்லை. தென் மண்டலத்திலும் இதுதான் நடக்கிறது. இந்தச் சூழ்நிலைகளில் எனது ஆதரவாளர்கள் சோர்வடைய மாட்டார்கள். அவர்கள் என்றைக்கும் என்னுடன்தான் இருப்பார்கள். அவர்களுக்கும், ஏழை மக்களுக்கும் நிறைய செய்திருக்கிறேன்.

பிரச்சினைகள் மீண்டும் வரவேண்டாம் என்பதற்காக அமைதியாக இருந்து வருகிறேன். ஆதரவாளர்களையும் அமைதிகாக்கச் சொல்லியிருக்கிறேன்.

அமைச்சராக இருந்தபோது...

மத்திய அமைச்சராக இருந்தபோது, இந்தியா முழுவதும் உரத் தட்டுப்பாடு இல்லாமலும், விலையை உயர்த்தாமலும் பார்த்துக்கொண்டேன். மருந்து விலையை ஏற்றாமல் பார்த்துக்கொண்டேன். எம்.பி. என்ற முறையில் மதுரைக்கு நிறைய நன்மைகள் செய்திருக்கிறேன். மதுரையை நவீன கழிப்பறைகளைக் கொண்டுவந்தேன். தென் மாவட்ட மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தைக் கொண்டு வந்தேன். நான் செய்த சாதனைகளை எல்லாம் அதிமுக அரசு முடக்கிவிட்டது.

அடுத்த தலைவர்?

திமுக தலைவருக்கு ஓய்வு என்பது இல்லை. அவர்தான் என்றைக்கும் திமுகவின் தலைவர்.

எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் ஸ்டாலினைத் தலைவராக வழிமொழிவேன் என்று தலைவர் கூறியதைக் கேட்கிறீர்கள். அது அவருடைய கருத்து. நான் தலைவரைத் தவிர யாரையும் தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

பலம்... பலவீனம்..?

என்னுடைய பலம் என்பது எனது ஆதரவாள்ர்கள்தான். அத்துடன், நான் மக்களுக்கு நிறைய செய்திருக்கிறேன். மக்கள் ஆதரவும் எனக்கு பலம்தான். என்னை எளிதாக ஏமாற்றுவதும், எதையும் வெளிப்படையாகப் பேசுவதும்தான் என்னுடைய பலவீனம். மனதில் இருப்பதை அப்படியே பேசிவிடுவேன்.

ஸ்டாலின் பலம் பலவீனம் குறித்து கேட்கிறீர்கள். அதைப் பற்றி சொல்ல முடியாது. அடுத்தவர்கள் பற்றி எதுவும் சொல்ல மாட்டேன்.

'நான் புறக்கணிக்கப்படுகிறேன்'

தென் மாவட்டத்தில் அவர் (ஸ்டாலின்) வந்தபோது, முரசொலியில் நான்கு தினங்களுக்கு முன்பு செய்திகள் வந்தன. அதில் என் படம் போடவில்லை. நான் புறக்கணிக்கப்படுகிறேன் என்றுதானே அதற்கு அர்த்தம். அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. அவர்கள் முதுகில் குத்திவிட்டார்கள் என்றும் சொல்லலாம். அதுதான் உண்மை.

எனக்கு தலைவர் பதவி வகிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லை. தலைவரே என்னை அழைத்தால்கூட, தங்களை (கருணாநிதி) தவிர யாரையும் தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று கூறிவிடுவேன்.

நரேந்திர மோடி, குஜராத் முதல்வராக நல்ல நிர்வாகியாக இருக்கிறார். என்னைப் பொறுத்தவரை, அவர் பற்றி அதைத்தான் சொல்வேன்.

தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டால்..?

கட்சியின் பொருளாளராக மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் கூட்டங்களுக்குச் செல்கிறார். தென் மண்டலத்தை நான் பார்த்துக்கொள்கிறேன். நான் வளர்வது பிடிக்கவில்லை என்பதால் நான் புறக்கணிப்பட்டேன். இன்றும் தென் மாவட்டங்கள் என் வசம் தான் உள்ளன. வேறு மாவட்டங்களில் இருந்தும் கூப்பிடுகிறார்கள். நான் தான் பிரச்சினை வேண்டாம் என்று செல்வது இல்லை.

திமுகவில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டால், என் நடவடிக்கை எப்படி இருக்கும் என்பது பற்றியெல்லாம் இப்போது சொல்ல முடியாது. அமைதியாக இருக்கிறேன். வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். நான் பதவியே வேண்டாம் என்று இருந்தேன்... மத்திய அமைச்சராக இருந்தேன். இப்படி எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

நானும், என் ஆதரவாளர்களும் எந்த சோதனை வந்தாலும் திமுகவில்தான் இருப்போம்.

பிரதமர் வேட்பாளர் குறித்து...

மோடியா, ராகுலா... யார் சிறந்த பிரதமர் வேட்பாளர் எனக் கேட்கிறீர்கள். ஏன்? ஜெயலலிதா கூட பிரதமர் ஆவேன் என்கிறார். யார் பிரதமர் என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள். யார் சிறந்த நிர்வாகியோ அவர் பிரதமர் ஆவார். அப்படி யார் வந்தாலும் நான் அமைதியாகத்தான் இருப்பேன்.

குடும்ப அரசியல் என்ற குற்றச்சாட்டுக்கு ஏற்கெனவே தலைவர் விளக்கம் அளித்துள்ளார். அரசியல் தலைவரின் குடும்பத்தினர் அரசியல்வாதியாக வருகிறார்கள். அதில் என்ன தவறு? கட்சியில் கஷ்டப்பட்டுதான் இந்த நிலைக்கு நாங்கள் வளர்ந்திருக்கிறோம்.

நான் முதல்வரானால்..?

நான் முதல்வரானால் எப்படி செயல்படுவேன் என்று கேட்கிறீர்கள். ஒருவேளை அப்படி ஒரு பகல் கனவு நனவானால், மக்களுக்கு என் உயிர் போகும் வரை நன்மைகளைச் செய்வேன்.

நான் புறக்கணிக்கப்படுவதால், என் மீது அன்புள்ள முன்னணித் தலைவர்களின் நட்பு நீடிக்கவே செய்கிறது. அதில் எந்த மாற்றமும் இருக்காது.

'எனக்கு திமுக உதவவில்லை'

அதிமுக ஆட்சிக்கு வராது என்று அப்போது தேர்தல் நாளில் நான் கூறியதற்கு, இப்போது பலனை அனுபவித்து வருகிறேன். என்னுடைய கல்லூரிக்கு சட்டத்துக்குப் புறம்பாக அனுமதி அளிக்க அதிமுக அரசு மறுத்து வருவது இதற்கு உதாரணம். அதிமுக அரசு என் மீது எந்தவித நடவடிக்கைகள் எடுத்தாலும், அதுபற்றி திமுக எதுவும் கேட்கவே இல்லை. யாரும் எந்தவித உதவியும் செய்யவில்லை.

திருமங்கலம் ஃபார்முலா

என் அரசியல் பயணத்தில், இடைத்தேர்தல்களில் நான் வெற்றி வாங்கித் தந்தது மகிழ்ச்சிக்குரிய அனுபவம். ஆனால், இப்போது புறக்கணிக்கப்படுவது வேதனை அளிக்கிறது. தென் மண்டல கட்சிப் பதவியதை வாங்கியதையே இப்போது வேதனையாக கருதுகிறேன்.

திருமங்கலம் ஃபார்முலா என்று பணம் கொடுத்து ஓட்டு வாங்கியதாகக் கூறுகிறார்கள். உண்மை அதுவல்ல. தலைவர் எப்படி 60களில் இரவு பகலாக உழைத்தாரோ, அதுபோலவே திருமங்கலத்திலும் இரவு பகல் பாராமல் உழைத்தேன். தொண்டர்களை உற்சாகப்படுத்தினேன். அதனால்தான் வெற்றி கிடைத்தது. அதுதான் திருமங்கலம் ஃபார்முலா.

என்னைப் புறக்கணித்தாலும் தூக்கி எறிந்தாலும், என் ஆதரவாளர்களுக்கு, எனக்கு வேண்டியவர்களுக்கு, மக்களுக்காக என்னால் முடிந்த வரையில் சாகும் வரை உழைத்துக்கொண்டிருப்பேன்" என்றார் மு.க.அழகிரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x