பெரியாரின் 138-வது பிறந்தநாள்: முதல்வர், தலைவர்கள் மரியாதை

பெரியாரின் 138-வது பிறந்தநாள்: முதல்வர், தலைவர்கள் மரியாதை
Updated on
1 min read

தந்தை பெரியாரின் 138-வது பிறந்தநாளையொட்டி அவரது படத்துக்கு முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உட்பட அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

திராவிடர் கழகத்தை தோற்று வித்தவரும் சாதி ஒழிப்பு, மூட நம்பிக்கை, பெண் விடுதலைக்காக போராடியவருமான தந்தை பெரியாரின் 138-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. முதல்வர் ஜெயலலிதா தனது போயஸ் கார்டன் இல்லத்தில் பெரியாரின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள பெரியார் சிலை அருகே வைக்கப் பட்டிருந்த பெரியார் படத்துக்கு அதிமுக அவைத் தலைவர் இ.மது சூதனன் தலைமையில் மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை, அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட அதிமுகவினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலையின்கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி மலர்தூவி மரியாதை செய்தார். அவருடன் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, ஆர்.எஸ்.பாரதி எம்.பி., உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் பெரியார் படத்துக்கு மரியாதை செலுத்தினர்.

வேப்பேரி திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் கி.வீர மணி தலைமையில் நூற்றுக்கும் அதிகமான தி.க.வினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அங்குள்ள பெரியார் சிலைக்கு முன்பாக தி.க.வினர் சாதி ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு உறுமொழி எடுத்துக்கொண்டனர்.

தேமுதிக தலைவர் விஜய காந்த் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவல கத்திலும் தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வீ.தங்கபாலு, எம்.கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் சத்தியமூர்த்தி பவனிலும் பெரியார் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

திருநாவுக்கரசர் தலைமையில்

சிம்சன் அருகில் உள்ள பெரியார் சிலைக்கும் வேப்பேரி யில் உள்ள பெரியார் நினைவிடத் திலும் திருநாவுக்கரசர் தலைமை யில் காங்கிரஸார் மரியாதை செலுத்தினர். மதிமுக தலைமை அலுவலகமான எழும்பூர் தாயகத் தில் உள்ள பெரியார் சிலைக்கு துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்தும் மலர்தூவியும் மரியாதை செய்தனர்.

பாமக துணை பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தைலாபுரம் பாமக தலைமையகத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in