

வருமானவரி சோதனையின் போது, நிலம் விற்ற பணம் ரூ.1.6 கோடியை வருமானவரித் துறையிடம் நானே ஒப்படைத் தேன் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்காக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த ஜான்குமார் தெரிவித்தார்.
புதுச்சேரி நெல்லித்தோப்பு சவரிபடையாச்சி வீதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் ஜான் குமார். இவர் 18-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை நடத்தி வருகிறார். நெல்லித்தோப்பு தொகுதியில் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்டு புதுச்சேரியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வர்.
தேர்தலில் போட்டியிடாமல் எம்எல்ஏக்கள் ஆதரவுடன் முதல்வ ரான நாராயணசாமி 6 மாதத்துக் குள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, நாராயணசாமி போட்டியிட வசதியாக, ஜான்குமார் கடந்த 15-ம்தேதி தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் கடந்த 17-ம் தேதி மதியம் சென்னை வருமானவரித் துறை அதிகாரிகள் சவரிபடையாச்சி வீதியிலுள்ள ஜான்குமாரின் வீட்டுக்கு வந்த னர். இரவு 11.15 மணி வரை சுமார் எட்டரை மணி நேரம் சோதனை நடந்தது. அப்போது ஜான்குமாரும் வீட்டில் இருந்தார்.
இந்நிலையில் ஜான்குமார், தனது வீட்டில் நடந்த வருமான வரி சோதனை தொடர்பாக செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
என்னை பிடிக்காத எதிர் தரப்பினரின் புகாரால் வருமான வரித் துறையினர் எனது வீட் டில் சோதனை நடத்தினர். இது நான் எதிர்பார்த்ததுதான். ஆவ ணங்கள், கணக்கு விவரங்களை ஆய்வு செய்தனர். சோதனைக்கு முழு ஒத்துழைப்பு தந்தேன். தங்க நகைகள், ரொக்கம் ஆகியவற்றையும் அவர்களின் பார்வைக்கு நானே வைத்தேன். ஆவணங்கள் எதையும் அவர்கள் எடுத்துச் செல்லவில்லை.
கடந்த 14-ம் தேதி எனது நிலம் விற்பனை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதற்கான ரூ.1.6 கோடி ரொக்கம் வீட்டில் இருந்ததையும் காண்பித்தேன். தற்போதுதான் நிலம் விற்பனை யானதால், அவர்கள் கேட்ட முழு ஆவணங்களையும் அப்போது தர இயலவில்லை. அதனால் அந்த ரொக்கத்தை அவர்களிடம் ஒப்படைத்தேன். ஆவணங்களை வருமானவரித் துறை அலு வலகத்தில் அளித்து பெற்றுக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
அதிமுக தூண்டுதல்
நான் தற்போது ஹாங்காங், ஜப்பான் பயணம் செல்வதால் வரும் 28-ம்தேதி சென்னை வருமானவரித் துறை அலுவலகம் செல்வேன். அதற்கு முன்பாக ஆடிட்டர் மூலம் தேவையான ஆவணங்களை சமர்பிக்க தெரி வித்துள்ளேன்.
இந்த சோதனைக்கு அதிமுகவினர் தூண்டுதல்தான் காரணம். முதல்வர் நாராயணசாமி வெற்றிக்கு பாடு படுவேன் என்று கூறினார்.