

கிண்டி ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் 4 ஆண்டுக்கு மேலாக நிழற்குடை இல்லாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கிண்டி ரயில் நிலையத்துக்கு எதிரே ரேஸ் கோர்ஸ் சாலை உள்ளது. பாரிமுனை, தியாகராய நகர், அண்ணா சதுக்கம் போன்ற இடங்களிலிருந்து வேளச்சேரி, தாம்பரம், கோயம்பேடு, போரூர், பூந்தமல்லி செல்லும் பஸ்கள் ரேஸ் கோர்ஸ் சாலை வழியே செல்கின்றன. இதற்கு முன்பு கிண்டி தொழிற்பேட்டை பஸ் நிறுத்தத்துக்கு நேர் எதிரே அண்ணா சாலையில் இருந்த பஸ் நிறுத்தம், 4 ஆண்டுகளுக்கு முன்பு மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்பட்டபோது, ரேஸ் கோர்ஸ் சாலைக்கு மாற்றப்பட்டது. அந்த இடத்தில் நிழற்குடை இல்லாததாலும், இரவில் விளக்கு வெளிச்சம் இல்லாததாலும் பல்வேறு சமூக விரோத செயல்கள் அரங்கேறுவதாக பொதுமக்களும் பயணிகளும் புகார் கூறுகின்றனர்.
இது தொடர்பாக ஜனகராஜ் என்ற பஸ் பயணி கூறியதாவது:
நான் தினமும் ரேஸ் கோர்ஸ் பஸ் நிறுத்தத்தில்தான் பஸ் ஏறி போரூரில் உள்ள எனது அலுவலகத்துக்கு செல்கிறேன். ரேஸ் கோர்ஸில் பஸ் நிறுத்தம் உள்ள இடத்தில் நிழற்குடை எதுவும் கிடையாது. மிகவும் குறுகலான இந்த சாலையில் ஒரு நேரத்தில் ஒரே பஸ் மட்டும்தான் வர முடியும்.
பயணிகளை ஏற்றுவதற்காக ஒரு பஸ் நின்றால், பின்னால் வரும் பஸ்கள், ஒன்றின் பின் ஒன்றாக 300 மீட்டர் தூரத்துக்கு வரிசையில் நின்று பயணி களை ஏற்றுகின்றன. இதனால், பின்னால் நிற்கும் பஸ்களை அடையாளம் காண முடியாமல் பயணிகள் அவதிப்படு கின்றனர். பஸ்கள் முறையின்றி நிறுத்தப் படுவதால், பயணிகளும் சிதறியபடியே நிற்கின்றனர். ஷேர் ஆட்டோக்கள், பஸ் தடத்துக்குள் புகுந்து இடையூறு செய்கின்றன. போதுமான அளவு மின் விளக்குகள் இல்லாதது இரவு நேரங்களில் சிக்கலை ஏற்படுத்துகிறது. அருகிலேயே 2 டாஸ்மாக் கடைகள் உள்ளதால், அங்கே குடித்துவிட்டு வருபவர்கள் பெண்களை கேலி செய்கின்றனர். திருட்டு போன்ற சமூக விரோத செயல்களும் அரங்கேறுகின்றன. இந்த பிரச்சினை கடந்த 4 ஆண்டுகளாக உள்ளது.
இங்கு நிழற்குடை அமைத்தால் பயணிகள் அங்கேயே நிற்பார்கள். அதனால் பஸ்களும் அங்கேயே நிற்கும். அந்த இடத்தில் விளக்கு வெளிச்சத்தை ஏற்படுத்தினால், இரவு நேரங்களில் குற்றச் செயல்களை தடுக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.