

வீரப்பன் கூட்டாளிகள் 4 பேர் உள்பட 15 பேரின் மரண தண்டனையை ஆயு ளாகக் குறைத்து உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
கருணை மனு மீது முடிவெடுக்க காலம் தாழ்த்தியதாலும் மனநலப் பாதிப்பு காரணமாகவும் மரண தண்டனை ஆயுளாகக் குறைக்கப்பட்டிருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். நாடு முழுவதும் பல்வேறு வழக்குகளில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 15 பேர் தங்களின் தண்டனையை குறைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், சிவ கீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை தீர்ப்பை அறிவித்தது. வீரப்பன் கூட்டாளிகள் பிலவேந்திரன், சைமன், மீசை மாதையன், ஞானபிரகாசம் உள்பட 13 பேரின் கருணை மனுக்கள் மீது முடிவெடுக்க காலம் தாழ்த்தியதால் அவர்களின் மரண தண்டனை ஆயுளாகக் குறைக்கப்படுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மனநலப் பாதிப்பு காரணமாக மேலும் இரண்டு பேரின் மரண தண்டனையையும் ஆயுளாகக் குறைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முக்கிய அம்சங்கள்
3 நீதிபதிகள் அமர்வு அளித்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
கருணை மனுவை நிராகரிக்க காலம் தாழ்த்துவது மரண தண்ட னையை ஆயுள் தண்டனையாகக் குறைப்பதற்கு அடித்தளமாக அமையும். மரண தண்டனைக் கைதிகளுக்கு சட்ட உதவி கிடைக்க சிறைத் துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
ஒரு கைதியின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட 14 நாள்களுக்குப் பின்னரே அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும்.
கைதியின் கருணை மனு குடியரசுத் தலைவராலோ அல்லது ஆளுநராலோ நிராகரிக்கப்பட்டால் அந்தத் தகவல் அவரது குடும்பத்தினருக்கு கண்டிப்பாக தெரிவிக்கப்பட வேண்டும்.
தண்டனையை நிறைவேற்றும் முன் அந்தக் கைதி தனது குடும்பத்தினரைச் சந்திக்க அனுமதி அளிக்கப்பட வேண்டும்.
மரண தண்டனை கைதி உள்பட யாராக இருந்தாலும் தனி சிறையில் அடைத்து வைப்பது சட்டவிரோதம். சிறைகளில் அந்த நடைமுறையைக் கடைப்பிடிக்கக் கூடாது. மனநலச் சிதைவால் பாதிக்கப்பட்டுள்ள மரண தண்டனை கைதிகளுக்கு தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
பஞ்சாபைச் சேர்ந்த மரண தண்டனை கைதி தேவேந்திரபால் சிங் புல்லர் தனது தண்டனையை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனு மீது 2013 ஏப்ரல் 12-ம் தேதி தீர்ப்பு வழங்கிய இரண்டு நீதிபதிகள் அமர்வு, ‘கருணை மனு மீது முடிவெடுக்க காலம் தாழ்த்தப்பட்டதைக் காரணம் காட்டி தண்டனையைக் குறைக்கக் கோர முடியாது’ என்று உத்தரவிட்டது. அந்தத் தீர்ப்புக்கு நேரெதிராக 3 நீதிபதிகள் அமர்வு இப்போது தீர்ப்பளித்துள்ளது.
ராஜீவ் கொலை வழக்கு
வீரப்பன் கூட்டாளிகளில் பிலவேந்திரன், மீசை மாதையன், ஞானபிரகாசம் ஆகியோர் கர்நாடக மாநிலம் பெல்காம் சிறையிலும் சைமன் பெங்களூர் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். 1993 ஏப்ரலில் கர்நாடக போலீஸார் 22 பேரை கொன்ற வழக்கில் நீண்ட விசாரணைக்குப் பின்னர் 2004 ஜனவரி 29-ல் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர்கள் 4 பேரும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினர். அவர் களின் மனுக்கள் 9 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டு 2013ல் நிராகரிக்கப்பட்டது. அதன் அடிப்படையிலேயே அவர்களின் மரண தண்டனை தற்போது ஆயுளாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பியிருந்தனர். அவர்களின் மனுக்கள் 11 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டு 2011-ல் நிராகரிக்கப்பட்டன.
எனவே அவர்களின் மரண தண்டனையும் ஆயுள் தண்டனை யாகக் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் 3 பேரும் உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.