தற்போதைய அரசியல் சூழலை பயன்படுத்தி பாஜகவை பலப்படுத்த மாவட்ட தலைவர்களுக்கு உத்தரவு
தமிழகத்தில் தற்போதுள்ள அரசியல் சூழலை பாஜகவுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு மாவட்டந்தோறும் கட்சியை பலப் படுத்த வேண்டும் என்று பாஜக மாவட்டத் தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைவ ரான பிறகு முதன் முறையாக மாவட்ட தலைவர்கள் கூட்டத்தை கடந்த சனிக்கிழமை கூட்டினார். மாநில பொதுக்குழு கூட்டம், இந்த மாதம் 18 அல்லது 19-ம் தேதியில் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியிருந்த சூழலில், இந்த திடீர் அவசரக் கூட்டம் நிர்வாகிகள் மத்தியில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக பாஜக மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
இந்திய அளவில் பாஜகவின் அமைப்பு வித்தியாசமான நிலைகளை கொண்டது. தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை என 4 பெருங் கோட்டங்கள் உள்ளன. இந்த கோட்டங்களுக்கு உட்பட்ட மாவட்ட தலைவர்க ளுக்கான ஆலோசனைக் கூட்டம் குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த கூட்டங்களில் அந்தந்த பெருங்கோட்டத்துக்கு உட்பட்ட மாவட்ட தலைவர்கள், அவர்களது மாவட்டத்தில் என்னென்ன பணிகளை மேற்கொண்டிருக்கி றார்கள் என்று கேட்டறியப் படுவது வழக்கம்.
தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்துவதற்கான நடவடிக் கைகளை எடுக்க வேண்டும் என்பதில் தேசிய தலைமை தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதன் அடிப்படையில் சென்னை பெருங் கோட்டத்துக்கான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடத் தப்பட்டது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்புக்கு பிறகு தமிழகத்தின் அரசியல் சூழலில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த அரசியல் சூழ்நிலைகளை பாஜகவுக்கு சாதகமாக பயன் படுத்திக்கொள்வது எப்படி என்று இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதுமட்டு மன்றி அவரவர் மாவட்டத்தில் நடத்த சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், அதையொட்டி சாமானிய மக்களின் மனநிலை எப்படி உள்ளது என்று கேட்டறி யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி மாவட்ட தலைவர்கள், அடுத்த தேர்தலுக்குள் அதிகப்படியான உறுப்பினர் சேர்ப்பது, தூய்மை இந்தியா திட்டத்தை பிரபலப்படுத் துவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஊழல் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வுகளை நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத் தப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழிசை கருத்து
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் கேட்டபோது, “இந்த கூட்டங்கள் அவ்வப்போது நடத்தப்படுவது வழக்கம். இந்தமுறை 2016-ம் ஆண்டு தேர்தலுக்குள் கட்சியை பலப்படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து பேசினோம். சீக்கிரமே எல்லா பெருங்கோட்டங் களிலும் இது மாதிரியான கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன.
வட மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடப்பதால் தேசிய அளவி லான நிர்வாகிகள் அங்கு தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அதற்குப் பிறகு அக்டோபர் 20-ம் தேதிக்கு பிறகு தமிழக பாஜகவுக்கான பொதுக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடத்தப்படும்” என்றார்.
