புதுச்சேரி வளர்ச்சிக்காக செலவு செய்யாததால் கடந்தாண்டு மத்திய அரசு வழங்கிய நிதி திருப்பி அனுப்பப்பட்டது: ஆளுநர் கிரண்பேடி குற்றச்சாட்டு

புதுச்சேரி வளர்ச்சிக்காக செலவு செய்யாததால் கடந்தாண்டு மத்திய அரசு வழங்கிய நிதி திருப்பி அனுப்பப்பட்டது: ஆளுநர் கிரண்பேடி குற்றச்சாட்டு
Updated on
2 min read

மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம், களவிளம்பரத்துறை சார்பில் ‘மோடி ஃபெஸ்ட்’ என்ற தலைப்பில் மத்திய அரசின் 3 ஆண்டுகள் சாதனை விளக்கக் கண்காட்சி புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் 3 நாட்கள் நடக்கிறது.

துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கண்காட்சியை தொடங்கி வைத்து பேசியதாவது: ஏழை மக்களின் வாழ்க்கையை வளமாக்குவதற்கான மத்திய அரசின் நல்ல திட்டங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. இங்கு மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்கள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

அரசு உங்கள் வீட்டின் கதவை தட்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. ஒவ்வொரு திட்டத்தையும் தெரிந்து கொண்டு, நாம்தான் அரசிடம் சென்று அதன் பலனை பெற வேண்டும். இதற்காக ஒவ்வொரு ஊரில் உள்ள படித்தவர்கள் அரசின் திட்டங்களை படிக்காத மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும்.

புதுச்சேரி வளர்ச்சிக்காக ரூ.1000 கோடிக்கு மேல் மத்திய அரசு நிதி கொடுக்கிறது. இதை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால் அந்த நிதி மீண்டும் மத்திய அரசுக்கே சென்றுவிடும். கடந்தாண்டு மத்திய அரசு வழங்கிய நிதி முறையாக செலவு செய்யாததால் பல கோடி ரூபாய் திருப்பி அனுப்பப்பட்டது.

படித்த இளைஞர்கள் ஆளுநர் மாளிகைக்கு வந்து வேலை இல்லை என்று கூறுகின்றனர். அவர்களுக்காக முத்ரா திட்டம் உள்ளது. அதன் மூலம் இளைஞர்கள் கடன் உதவி பெற்று தொழில் துவங்க வேண்டும். புதுச்சேரி அரசு வீடுகளில் கழிவறை கட்ட நிதியுதவி வழங்குகிறது. அதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். என்றார்.

இலவச தொலைபேசி எண் சேவை

மத்திய அரசின் திட்டங்களை பொதுமக்கள் தெரிந்துகொள்ள இலவச தொலைபேசி எண் கொண்ட கட்டுப்பாட்டு அறையை துவங்க வேண்டும். ஆர்வமுள்ள தொண்டு நிறுவனங்கள் இப்பணியை மேற்கொள்ள முன்வர வேண்டும். தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் உடனே இலவச தொலைபேசி எண் (டோல் ஃபிரீ) சேவையை ஆரம்பிக்க வேண்டும். அந்த எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொண்டு மத்திய அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லையென்றால் அரசின் திட்டங்கள் ஏட்டளவில் மட்டுமே இருக்கும். இவ்வாறு கூறினார்.

இந்த கண்காட்சியில் மத்திய அரசின் கடந்த 3 ஆண்டு கால ஆட்சியில் இந்தியா அடைந்துள்ள முன்னேற் றங்கள், சாதனைகள் இடம் பெற்றுள்ளன. மேலும், மக்கள் தங்கள் கருத்துகளை பிரதமருக்கு தெரிவித்தல், தனி நபர்களுக்கு தேவையான திட்டங்கள் பற்றிய விவரம், பிரதமருடன் (கட்அவுட்) செல்பி, பல்வேறு தலைப்புகளில் நிபுணர்களின் விளக்கவுரைகள், செயலி தரவிறக்கம், குலுக்கல் பரிசு உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இக்கண்காட்சி நாளை வரை நடக்கிறது. காலை 11 மணி முதல் இரவு 7.30 மணி வரை பொதுமக்கள் கண்காட்சியை பார்வையிடலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in