121-வது பிறந்த நாள்: காயிதே மில்லத் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை

121-வது பிறந்த நாள்: காயிதே மில்லத் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை
Updated on
1 min read

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மறைந்த தலைவர் காயிதே மில்லத்தின் 121-வது பிறந்த நாளை முன்னிட்டு திருவல்லிக்கேணியில் உள்ள அவரது நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மூத்த தலைவரான மறைந்த காயிதே மில்லத்தின் 121-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. காயிதே மில்லத்தின் பிறந்த நாளை முன்னிட்டு திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை அருகே உள்ள மசூதியில் உள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில் அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் நேற்று மரியாதை செலுத்தினர்.

தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.பி.வேலு மணி, துரைக்கண்ணு, கடம்பூர் ராஜு ஆகியோர் திருவல்லிக் கேணியில் உள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். மேலும் மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை, அதிமுக அவைத் தலைவர் இ.மதுசூதனன், இலக்கிய அணிச் செயலாளர் பா.வளர்மதி ஆகியோரும் காலை 9 மணியளவில் மரியாதை செலுத்தினர்.

திமுக சார்பில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் காயிதே மில்லத் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அவருடன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் எம்எல்ஏ முகம்மது அபுபக்கரும் மரியாதை செலுத்தினார்.

காயிதே மில்லத் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘தனது சமுதாயத்துக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழ் இனத்துக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர் காயிதே மில்லத். அவரது பிறந்த நாளை கொண்டாடும் வேளையில், அவருடைய கனவை நிறைவேற்றும் வண்ணம் செயல்படுவோம்’’ என்றார்.

தேமுதிக சார்பில் தேமுதிக இளைஞரணிச் செயலாளர் எல்.கே.சுதீஷ், தேமுதிக தலைமை நிலையச் செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் காயிதே மில்லத் நினைவிடத்தில் மலர்ப் போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினர். காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் எம்எல்ஏ விஷ்ணுபிரசாத் தனது ஆதரவாளர்களுடன் காயிதே மில்லத் நினைவிடத்துக்கு வந்து மரியாதை செலுத்தினார்.

மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, காயிதே மில்லத் நினைவிடத்தில் மலர்ப் போர்வை போர்த்தினார். அவருடன் மதிமுக சிறுபான்மை பிரிவு மாநிலச் செயலாளர் முராத் புகாரி, தென் சென்னை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் கே.கழககுமார், தென் சென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் வழக்கறிஞர் ப.சுப்பிரமணி, தலைமை நிலைய துணைச் செயலாளர் கே.வி.மலுக்காமலி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விசிக சார்பில் இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் மாநிலச் செயலாளர் ரகுமான், மாவட்டத் தலைவர் செல்லதுரை உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். இதேபோல் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் காயிதே மில்லத் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in