

தமிழக அரசு அனைத்து ரேஷன் கடைகளையும் தொடர்ந்து சோதனையிட்டு, கண்காணித்து, குறைகளை கலைந்திட வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் ரேஷன் கடைகள் திறந்திருக்கும் நாட்களில் ரேஷன் கார்டு வைத்திருப்போர்களுக்கு பொது விநியோகத்திட்டத்தின் அடிப்படையில் ரேஷன் பொருள்கள் ஒரே நாளிலோ அல்லது பிற நாட்களிலோ முழுமையாக கிடைப்பதில்லை.
மாதத்தில் முதல் 4 அல்லது 5 நாட்களுக்குள் மட்டுமே ரேஷன் பொருள்கள் கிடைக்கின்றது. அதுவும் முழுமையாக கிடைப்பதில்லை என்றே பொது மக்கள் குறை கூறுகின்றனர். மற்ற நாட்களில் சென்றால் சில பொருள்கள் கிடைக்கும், பல பொருள்கள் அந்த மாதத்திற்குள் கிடைக்காது.
முக்கியமாக பருப்பு வகைகள், கோதுமை, மண்ணெண்ணெய், பாமாயில் போன்றவற்றிற்கு ரேஷன் கடைகளில் தட்டுப்பாடு உள்ளது. இதனால் பெருமளவு பாதிக்கப்படுவது ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தான்.
தமிழகத்தில் சுமார் 2 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. நகரம், கிராமம் என அனைத்துப் பகுதிகளிலும் உள்ள ரேஷன் கடைகளில் மானிய விலையில் விநியோகிக்கப்படும் உணவுப் பொருள்களில் பலவற்றை கார்டுக்கு உரியவர்களுக்கு வழங்காமல் வெளியில் மற்றவர்களுக்கு அதிக விலைக்கு விற்கிறார்கள். குறிப்பாக அரிசி, மண்ணெண்ணெய் ஆகியவற்றை பதுக்கி, கள்ளச்சந்தையில் விற்கின்றனர்.
முக்கியமாக ரேஷன் கார்டு வைத்திருந்தும் பொருள்கள் வாங்காமல் இருப்பவர்களின் கார்டுக்கு உரிய சில பொருள்களை அவர்கள் வாங்கியதாக கணக்கு காட்டி, வெளிச்சந்தையில் விற்பது அதிகரித்துக்கொண்டே போகிறது.
சில ரேஷன் கடைகளில் தங்களுக்கு வேண்டிய மளிகைப் பொருள்களை மட்டுமே வாங்க வருபவர்களிடம் மற்ற சில மளிகைப் பொருள்களை குறிப்பாக சோப்பு, உப்பு, தேங்காய் எண்ணெய், டீ தூள் போன்றவற்றை வாங்கவும் கட்டாயப்படுத்துகிறார்கள். இது போன்ற பல்வேறு குறைபாடுகள் கடந்த பல மாதங்களாக தமிழகம் முழுவதும் ஆங்காங்கே உள்ள ரேஷன் கடைகளில் நிலவி வருகிறது. எனவே தமிழகத்தில் பொது விநியோகத்திட்டம் மூலம் ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படும் மளிகைப் பொருள்கள் ஒவ்வொரு மாதமும் முழுமையாக உரிய நாட்களில் வழங்கப்படாமல் இருக்கின்றது.
மேலும் அரசு அதிகாரிகள் ரேஷன் கடைகளுக்குச் சென்று முறையாக கண்காணித்து சோதனையிடாததும், சோதனை செய்தாலும் உரிய நடவடிக்கை எடுக்காததும் தான் ரேஷன் கடைகளில் ரேஷன் பொருள்கள் கிடைக்காமல் இருப்பதற்கும், தவறுகள் நடப்பதற்கும் காரணமாக இருக்கின்றது.
எனவே, தமிழக அரசு அனைத்து ரேஷன் கடைகளையும் தொடர்ந்து சோதனையிட்டு, கண்காணித்து, குறைகளை கலைந்திட வேண்டும். மேலும் தமிழக அரசு காலம் தாழ்தாமல் பொது மக்களுக்கு உரிய ரேஷன் பொருட்கள் அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் முழுமையாக, தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுக்க வேண்டும்''என்று வாசன் கூறியுள்ளார்.