

விருதுநகர்: விருதுநகரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் 205 இன்று கைது செய்யப்பட்டனர்.
தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எஸ்தர் ராணி தலைமை வகித்தார். கௌரவத் தலைவர் இந்துராணி, செயலாளர் பாண்டியம்மாள், பொருளாளர் செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, அங்கன்வாடி ஊழியர்களுக்கு இளநிலை உதவியாளர் ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியமாக ரூ.6,750 மற்றும் அகவிலைப்படி வழங்க வேண்டும், தற்காலிக பணி நீக்க காலத்தில் பிழைப்பூதியம் வழங்க வேண்டும், 12 மாத மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும்,
அரசு துறைகளில் காலிப் பணியிடங்களில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் 205 பேரை சூலக்கரை போலீஸார் கைது செய்தனர்.