

புதுச்சேரி: புதுச்சேரிக்கு தவெக தலைவர் விஜய் வாகனம் வந்து செல்ல தனிபாதை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டம் நடைபெறும் இடத்துக்கு வருகை தந்த பிறகு, ஒரு மணி கழித்தே விஜய் மேடை ஏறி உரையாற்றினார்.
தவெக பொதுக்கூட்டம் நடந்த உப்பளம் துறைமுக மைதானம் 1 லட்சம் சதுர அடிக்கும் அதிகமான பெரிய பரப்பளவை கொண்டது. ஆனால் அதற்கு வரும் பாதைகள் மிகவும் குறுகலானவை. நகர பகுதியில் விஜய் வாகனம் பொதுக்கூட்டத்துக்கு வந்தால் கரூர் சம்பவம் போல பெரும் நெரிசல் ஏற்படும் அபாயம் இருந்தது. இதனால் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், விஜய் வாகனத்துக்காக தனி வழித்தடத்தை திட்டமிட்டிருந்தார்.
சென்னையிலிருந்து காலை 8.30 மணிக்கு விஜய் கிளம்பினார். அவர் கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரிக்கு வந்தார். இந்திராகாந்தி சதுக்கம், ராஜீவ் காந்தி சதுக்கம், மரப்பாலம் மூப்பனார் சதுக்கம் வழியாக முதலியார்பேட்டைக்கு விஜய் கார் வந்தது.
அம்பேத்கர் சாலையில் விஜய் கார் வந்தால் பெரும் நெரிசல் ஏற்பட்டிருக்கும். ஆனால் ஒரு கார் மட்டுமே நுழையக்கூடிய சிறிய பாதையின் வழியாக உப்பளம் துறைமுகத்தின் பின்புறம் விஜய் வாகனம் வர புஸ்ஸி ஆனந்த் ஏற்பாடு செய்திருந்தார்.
காலை 10 மணிக்குத்தான் அந்த சிறிய பாதையை ஒதுக்கி தடுப்புகளை ஏற்படுத்தி விஜய் வாகனம் வர போலீஸார் ஏற்பாடு செய்திருந்தனர். அந்த சிறிய பாதையின் வழியாக துறைமுக வளாகத்தின் பின்புறம் தடுப்பு சுவரை உடைத்து வழி ஏற்படுத்தப்பட்டிருந்தது.
இதனால் எந்த நெரிசலுசம் இன்றி காலை 10.20 மணிக்கு விஜய் வாகனம் துறைமுக வளாகத்தை வந்தடைந்தது. காலை 10.30 மணிக்கு விஜய் பொதுகூட்டம் வளாகம் வருவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் 10 நிமிடம் முன்பாகவே விஜய் பொதுகூட்ட வளாகம் வந்தார். காரில் வந்த விஜய் பிரச்சார வாகனத்தில் சென்று தயாரானார். ஆனால் ஒரு மணி நேரத்திற்கு பிறகே வேன் மீது ஏறி பேசினார். இருக்கை எதுவும் போடாமல் இருந்ததால் தொண்டர்கள் வெயிலில் நின்றுகொண்டிருந்தனர்.