

ஜனவரி மாதம் வந்தாலே மதுரை விழா காலம் போல் காணப்படும். போக்குவரத்து இடையூறு, பொது மக்களின் அவதியை எல்லாம் பொருட்படுத்தாமல், வீதியெங்கும் தோரணங்கள், சுவரெல்லாம் போஸ்டர்கள், திரும்பிய பக்கம் எல்லாம் பிளக்ஸ் போர்டுகள் என்று மதுரையை திக்குமுக்காட வைப்பார்கள் மு.க.அழகிரி ஆதர வாளர்கள். நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும், பிரியாணி வழங்கும் விழாவும் களைகட்டும்.
தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்த போதிலும்கூட, கடந்த ஆண்டு ஜன. 30-ம் தேதியன்று ஆளுங்கட்சி போல விழா நடத்தினர் அழகிரி ஆதரவாளர்கள். ஆனால், கடந்த ஆண்டு 10 ஆயிரம் பேருக்கு பிரியாணி வழங்கிய மாவட்டச் செயலர் பி.மூர்த்தி இந்த ஆண்டு ஸ்டாலின் அணிக்குப் போய்விட்டார். அப்போது களப்பணியாற்றியவர்களில் சுமார் 60 சதவீத நிர்வாகிகள் இப்போது அணி மாறிவிட்டார்கள்.
அழகிரியை ‘வாழ்த்தி’ போஸ்டர் ஒட்டிய குற்றத்துக்காக மதுரை முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் எல்லாம் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுவிட்டனர். இதனால், சமீபத்தில் அழகிரி நடத்திய மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சியில்கூட கலந்து கொள்ளாமல், வெளியே நின்றார் மன்னன். இந்தச் சூழலில் அழகிரியும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால் அழகிரி பிறந்த நாள் விழா நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மு.க.அழகிரி தற்காலிக நீக்க அறிவிப்பு வெளியான நேரத்தில், மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள ராஜாமுத்தையா மன்றத்தில் அழகிரி பிறந்த நாள் விழா ஏற்பாடுகள் குறித்த ஆலோசனையில் இருந்தார் பி.எம்.மன்னன்.
“இந்த ஆண்டு அழகிரி பிறந்த நாள் விழா நடைபெறுமா?” என்று அவரிடம் கேட்டபோது, “அண்ணன் பிறந்த நாள் விழா இந்த ஆண்டும் வழக்கமான உற்சாகத்துடன் நடை பெறும். அன்றைய தினம் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளோம். 10 ஆயிரம் பேருக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, 10 ஆயிரம் பேருக்கு இலவச வேட்டி, 10 ஆயிரம் பேருக்கு இலவச சேலை வழங்கப்படும். இதுதவிர மூன்று சக்கர சைக்கிள், மூன்று சக்கர ஸ்கூட்டர், தேய்ப்பு பெட்டி, தேய்ப்பு வண்டி போன்றவையும் வழங்குவோம்.
வழக்கமாக அண்ணனின் வயது எத்தனையோ, அத்தனை கிலோ கேக் வெட்டுவோம். அதன்படி, இந்த ஆண்டு 63 கிலோ பிறந்த நாள் கேக் வெட்டப்படும். கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்ததால், எப்படி இதை எல்லாம் முன்னின்று நடத்துவது என்று பயந்து கொண்டிருந்தேன். இனிமேல் அந்தக் கவலையில்லை” என்றார்.